''கரோனா இரண்டாவது அலை வரலாம் என உலக நல நிறுவனம் பல முறை எச்சரிக்கை விடுத்த போதிலும், போதிய மருத்துவர்களை நியமிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு, தற்பொழுது மருத்துவர்கள் பற்றாக்குறை என நீலிக்கண்ணீர் வடிக்கிறது தமிழக அரசு. தனது தவறை மறைக்க முயல்கிறது. தமிழக அரசின் இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது'' என்று டாக்டர் ரவீந்திரநாத் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை
''தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கிறது. இவர்களுக்கான உரிமைகளைப் பறிக்கிறது. குறைந்த தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படை, தற்காலிக அடிப்படை மற்றும் வெளிக்கொணர்தல் முறையில் இவர்களைப் பணி நியமனம் செய்து வருகிறது.
தற்காலிக ஊழியர்களால் நிரம்பி வழியும் துறையாக மக்கள் நல்வாழ்வுத்துறை மாற்றப்பட்டு விட்டது. அதுமட்டுமன்றி, 12 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகிறது. ஈவு இரக்கமற்ற முறையில், கடும் உழைப்புச் சுரண்டலில் தமிழக அரசு ஈடுபடுகிறது. இது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும்.
தமிழக 'மக்கள் நல்வாழ்வுத்துறை' என்பதே, அத்துறையின் ஊழியர்களின் நலவாழ்வுக்கு எதிரான துறையாக மாற்றப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்காக, அதன் லாபத்தைப் பல மடங்கு அதிகரிப்பதற்காக உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, மத்திய மோடி அரசு கடைப்பிடிக்கும் மக்கள் விரோத தொழிலாளர் விரோத மக்கள் நல்வாழ்வுக் கொள்கைதான்.
மோடி அரசு, இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறையை, உலக வங்கியின் நல்வாழ்வுத்துறையாக மாற்றிவிட்டது என்பது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்க்காமல், அதை நடைமுறைப்படுத்துவதால்தான் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது.
மோடி அரசின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கை, பயிற்சி மருத்துவர்களையும், பட்ட மேற்படிப்பு மாணவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. கரோனா காலத்தில், போதிய மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வலியுறுத்தாமல், பயிற்சி மருத்துவர்களின் பயிற்சிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என, மோடி அரசின் கைப்பாவையாகச் செயல்படும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காவடி தூக்கும், தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்தப் பயிற்சி மருத்துவர்கள் விரோத நடவடிக்கையை எதிர்க்காமல், வாய் மூடி மௌனியாகிவிட்டது தமிழக அரசு. எனவே, மிகக் குறைந்த பயிற்சிக் கால ஊதியத்துடன் ( Stipend), பயிற்சி மருத்துவர்களின் பயிற்சிக் காலத்தை நீட்டிக்க தமிழக அரசு முயல்கிறது. அவர்களை கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்க தமிழக அரசு நினைக்கிறது.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிட மருத்துவர்கள் போதவில்லை என்ற காரணத்தைக் காட்டி, பயிற்சி மருத்துவர்களை பலிகடா ஆக்குகிறது தமிழக அரசு. தமிழக அரசின் வாதம் தவறானதாகும். உண்மைக்கு மாறானதாகும்.
கரோனா நோயாளிகளுக்காக சிகிச்சை வழங்கிட, தற்காலிகமாகப் பணி நியமனம் செய்யப்பட்ட, மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டு, எம்.ஆர்.பி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பையும் முடித்து, பணி நியமனத்திற்காக காத்திருக்கும் அனைவருக்கும் வேலை தரவும் மறுத்துவிட்டது.
கரோனா இரண்டாவது அலை வரலாம் என உலக நல நிறுவனம் பல முறை எச்சரிக்கை விடுத்தபோதிலும், போதிய மருத்துவர்களை நியமிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு, தற்பொழுது மருத்துவர்கள் பற்றாக்குறை என நீலிக்கண்ணீர் வடிக்கிறது தமிழக அரசு. தனது தவறை மறைக்க முயல்கிறது. தமிழக அரசின் இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, *2021 மார்ச் இறுதியில் ஓராண்டு பயிற்சியை முடித்த இளம் மருத்துவர்களுக்கு உடனடியாக பணி நிறைவுச் சான்றிதழை வழங்கிட வேண்டும்.
*அவர்கள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ள உதவிட வேண்டும்.
* அவர்களில் விருப்பம் உள்ளவர்களைத் தற்காலிக அரசு மருத்துவர்களாக நியமித்து , அரசு உதவி மருத்துவர்களுக்கான ஊதியத்தையும் இதர சலுகைகளையும் வழங்கிட வேண்டும்.
அதுவே, இளம் மருத்துவர்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதோடு, வேகமாகப் பரவும் கரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். அதை விடுத்து, மத்திய மோடி அரசுக்கும், நிதி ஆயோக்கிற்கும், தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் அடிபணிந்து, தலையாட்டி பொம்மைபோல் செயல்படக் கூடாது.
மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழகத்தின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். பயிற்சி மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசை, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாடு மருத்துவ மாணவர்களின் சங்கப் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறது. பயிற்சி மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றியடைய அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தர வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.