தமிழகம்

பாஜகவுக்கே வெற்றி; மேற்கு வங்க மக்கள் வளர்ச்சிக்காக வாக்களிப்பார்கள்: சுவேந்து அதிகாரி

ஏஎன்ஐ

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், நந்திகிராம் மட்டுமல்ல மேற்கு வங்கம் முழுவதும் பாஜகவே வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் நந்திகிராம் வேட்பாளர் சுவேந்து அதிகாரி.

மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலை சந்திக்கும் 30 தொகுதிகளும் மாநிலத்தின் பஷ்சிம் மெதினிபூர், கிழக்கு மெதினிபூர், தெற்கு 24 பர்கானாஸ், பாங்குரா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ளன. 30 தொகுதிகளில் 8 தொகுதிகள் தனித் தொகுதிகள்.

30 தொகுதிகளிலும் 19 பெண்கள் உட்பட மொத்தம் 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மிக முக்கிய வேட்பாளரான முதல்வர் மம்தா, நந்திகிராமில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த சுவேந்து அதிகாரி, பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ஒரு காலத்தில் முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமாக இருந்த இவர், கடந்த டிசம்பரில் மம்தாவின் திரிணமூல் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். தவிர இடதுசாரி வேட்பாளர் மீனாட்சி முகர்ஜியும் இங்கு களத்தில் உள்ளார்.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வாக்களிக்கச் செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மேற்கு வங்க மக்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக வாக்களிப்பார்கள். அவர்கள் மம்தாவின் சமாதான அரசியலுக்கு இணங்கமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

அதேபோல் தனது வாக்குரிமையை செலுத்திய பின்னர் பேசிய அவர், "வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. மம்தாவுக்கு எதிராக மேற்கு வங்க இளைஞர்கள் அணி திரண்டுள்ளனர். அவர்களின் வேலைவாய்ப்புக்காக மம்தா ஏதும் செய்யவில்லை.

விவசாயிகளின் அதிருப்தியை அவர் சம்பாதித்துவைத்துள்ளார். அம்பான் புயல் நிவாரணத் தொகையை அவர் சுருட்டிக் கொண்டார். மேற்குவங்கத்தில் அனைவருமே அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த நாடே நந்திகிராம் முடிவை எதிர்நோக்கியுள்ள நிலையில் பெருமளவில் திரண்டுவந்து வாக்களிப்பீர்" எனப் பேசினார்.

காலை 9 மணி நிலவரப்படி 13.14% வாக்குப்பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT