கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நேற்று மேம்பாலத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சேலம் நீதிபதி உட்பட 6 பேர் பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் கேதை யுறும்பைச் சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி கோயிலுக்குச் செல்ல குடும்பத்தினர் 10 பேருடன் நேற்று காரில் புறப்பட்டார். திண்டுக் கல்லைச் சேர்ந்த பழனிசாமி(35) காரை ஓட்டி வந்தார்.
நீதிபதி பிரகாஷ்
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.பிரகாஷ்(32). இவர் சேலம் மாவட்ட நீதிமன்ற முதன்மை உரிமையியல் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் சேலத்தைச் சேர்ந்த டாக்டர் பிரதீப்குமார்(28). இருவரும் கேரள மாநிலம் மூணாறு செல்ல சேலத்தில் இருந்து நேற்று காரில் சென்றுகொண்டிருந்தனர். காரை பிரதீப்குமார் ஓட்டி வந்தார்.
கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே புங்கம்பாடி மேம்பாலத்தில் செல்லும்போது, பிரதீப்குமார் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை மையத் தடுப்பைத் தாண்டி எதிரே கொடுமுடி நோக்கிச் சென்ற கார் மீது மோதியது.
இதில், கார்களில் பயணம் செய்த நீதிபதி பிரகாஷ், கேதையுறும்பைச் சேர்ந்த ராஜம் மாள்(48), சாந்தி(25) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் படுகாய மடைந்து கரூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கேதையுறும்பைச் சேர்ந்த வள்ளியம்மாள்(38), சூர்யா(10), திண்டுக் கல்லைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பழனிசாமி(35) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
டாக்டர் பிரதீப்குமார் (28) மற் றும் கேதையுறும்பு பிரகாஷ்(36), பஞ்சவர்ணம்(40), செல்வன்(18). ராஜலட்சுமி(46), ராணி(48) ஆகிய 6 பேர் கரூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வழக்கு பதிவு
விபத்து நடந்த இடத்தை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.வந்திதா பாண்டே, அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் கீதாஞ்சலி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். ஆட்சியர் ச.ஜெயந்தி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தவர்களின் உறவினர் களுக்கு ஆறுதல் கூறினார்.
விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நேற்று நேரிட்ட விபத்தில் சிக்கி உருக்குலைந்த கார்கள்.