தமிழகம்

ஏப்.4-ம் தேதி அவகாசம் முடியும் நாளில் கூடுதலாக 2 மணி நேரம் பிரச்சாரத்துக்கு அனுமதி: இரவு 7 வரை வாக்கு சேகரிக்கலாம் என சத்யபிரத சாஹு தகவல்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கடைசி நாள் பிரச்சாரத்துக்கு கூடுதலாக 2 மணி நேரம் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

இத்தேர்தலில் ஏப்ரல் 4-ம் தேதிவரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இறுதி நாளில் வழக்கமாக மாலை 5 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படும். இந்ததேர்தலில் இரவு 7 மணி வரைபிரச்சாரம் செய்யலாம். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில், அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைய குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்களை பொருத்தும் பணிகளும் விரைவில் முடியும்.

திருச்சியில் காவலர்களுக்கு பண விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல்ஆணையம் கேட்ட தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தான் எடுக்கும்.

திண்டுக்கல் லியோனி பேசியதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தயாநிதி மாறனின் சர்ச்சை பேச்சு குறித்து அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதித்தவர்கள் அதற்கான சான்றிதழோடு தங்கள் சொந்த வாகனங்களில் பாதுகாப்பாக வந்து வாக்களிக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடைசி நேர பணப் பரிமாற்றத்தை கண்காணிக்க கூடுதல் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மத்திய ராணுவப் படையும் களத்தில் உள்ளது.

வாக்குக்கு பணம் கொடுத்ததாக 133 புகார்கள் வந்துள்ளன. அதில்ஆதாரத்தோடு இருந்த 57 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ரூ.42.47 கோடி,சென்னையில் ரூ.36.73 கோடி,திருப்பூரில் ரூ.14 கோடி ரொக்கம்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறை சார்பில்ரூ.66.47 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.350 கோடிக்கு மேல் ரொக்கம், பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT