சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், சிங்காநல்லூர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆர்.மகேந்திரன் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு எங்களது கட்சிக்கென ஒட்டுமொத்தமாக முற்றிலும் மாறுபட்ட தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம். குறிப்பாக, எங்களதுதேர்தல் அறிக்கை இலவசங்கள்இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. நாங்கள் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம், யாரும் ஏன் இலவசங்கள் தரவில்லை என கேட்கவில்லை. மாறாக பாராட்டவேசெய்கின்றனர்.
தற்போது, சிங்காநல்லூர் தொகுதிக்கு தேவையான பல அம்சங்களை மக்களின் கருத்தறிந்து கொண்டு வந்துள்ளோம். தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மக்களின் குறைகளை தீர்க்க முழுநேரம் செயல்படும் மக்கள் நற்பணி மையங்கள் அமைக்கப்படும். மாதாந்திர நடவடிக்கைகள் ‘வாட்ஸ்அப்’ குழுக்கள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். தொழில் துறை வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தனி பெண்கள் மற்றும் சிறுதொழில்களுக்காக சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, பெண்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
விமானநிலைய விரிவாக்கத்துக்காக 678 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணி விரைந்து முடிக்கப்படும். சிங்காநல்லூருக்கான ‘கிரீன்ஃபீல்டு’ விமானநிலையம் கட்டமைக்கப்படும். இருகூர் ரயில்நிலையம் தரம் உயர்த்தப் படும். இணைப்பு சாலை திட்டங்கள்நடைமுறைப்படுத்தப்படும்.தொகுதி முழுவதும் இலவச வைஃபை வசதி, ஒரு லட்சம் புத்தகங்களுடன் கூடிய பொது நூலகம் உருவாக்கப்பட்டு, இலவச பயன்பாட்டுக்கு வழங்கப்படும். நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை சிங்காநல்லூரில் விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வார்டிலும் ஆரோக்கியம் - மருத்துவ சிகிச்சையகம் அமைக்கப்பட்டு, ஆரோக்கிய குறைபாடுகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
மொத்தமாக சிங்காநல்லூரை சிங்கார சிங்கையாக மாற்றுவதற்கான அம்சங்களை தொகுதி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.சிங்காநல்லூர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட, கட்சியின் துணைத் தலைவரும் வேட்பாளருமான ஆர்.மகேந்திரன் பெற்றுக் கொண்டார். படம் ஜெ.மனோகரன்