தமிழகம்

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது பாமக தான்: பிரச்சாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

செய்திப்பிரிவு

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை பாமக தான் பெற்றுத் தந்தது என தருமபுரி மாவட்ட பிரச்சாரத்தின்போது பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு நேற்று முன் தினம் இரவு பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று பேசினார். வாகனத்தில் இருந்தபடி அவர் பேசியது:

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி தான் மலர உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் எதிரணியினர் டெபாஸிட் இழக்க வேண்டும். நம் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் நானும், அன்புமணி ராமதாஸும் போட்டியிடுவதாக எண்ணி வாக்காளர்கள் ஆதரவு தாருங்கள். முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நடந்த, கடந்த 4 ஆண்டு ஆட்சியில் சிறு குறை கூற முடியுமா? அவரும் ஒரு விவசாயி, நானும் ஒரு விவசாயி.

நாங்கள் இணைந்து மாநில மக்களுக்கு பல திட்டங்களை நிறைவேற்றுவோம். அதிமுக-வின் தேர்தல் அறிக்கை அள்ள, அள்ள குறையாத அமுதசுரபி. பாமக தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் அறிகுறி. ஆனால், திமுக-வின் தேர்தல் அறிக்கை முழுவதும் காப்பி அடிக்கப்பட்ட அறிக்கை. அவர்கள் பை நிறைய பொய் வைத்துள்ளனர். சிறு பான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது பாமக தான். சிறுபான்மையினர் அச்சப்படும் வகையில் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படாது. இதை தயாரிக்கும்போது, பெற்றோர் பிறந்த இடம் உள்ளிட்ட 6 கேள்விகள் கேட்கப்படாது.

அதிமுக ஆட்சி அமைந்தால் சிறுபான்மையினர் நலன் காக்கப்படும். திமுக-வுக்கு நாகரிகம், பண்பாடு போன்ற எதுவுமே கிடையாது. அதிமுக தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைந்ததும் ஒகேனக்கலில் வன விலங்கு சரணாலயம் அமைக்கப்படும். ஏரியூரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், பாப்பாரப்பட்டியில் ஜவுளிப் பூங்கா, சின்னாறு பாசன கால்வாய் திட்டம், பென்னாகரத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். மேலும், ஒகேனக்கல் உபரி நீரை பாசனத்துக்கு வழங்கும் திட்டமும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு பேசினார்.

SCROLL FOR NEXT