தியாகராயநகர் சட்டப்பேரவை தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தியாகராயநகர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவின் சத்தியநாராயணன், திமுகவின் கருணாநிதி, அமமுகவின் பரணீஸ்வரன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பழ.கருப்பையா, நாம் தமிழர் கட்சியின் சிவசங்கரி உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன், “கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டேன். மீண்டும் வெற்றி பெற்றால் தொகுதியில் உள்ள மேம்பாலங்களை, உலகத் தரம் வாய்ந்த மேம்பாலங்களாக மாற்றியமைப்பேன்” என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
திமுக வேட்பாளர் கருணாநிதி, “குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதற்கு தீர்வு காணப்படும். தியாகராயநகர் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு பெரிய பேருந்து நிலையமாக கட்டித் தரப்படும். வடபழனி 100 அடி சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டி தரப்படும்” என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அமமுக வேட்பாளர் பரணீஸ்வரன், “வியாபாரிகளின் நலன் காக்கப்படும், பட்டா இல்லாமல் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும், அனைத்து குடியிருப்புகளுக்கும் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படும்” என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பழ.கருப்பையா, “தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும். எனவே, அந்த ஊழலுக்கு மாற்றான நேர்மையுடைய கட்சியான மக்கள் நீதி மய்யத்தை ஆதரிக்க வேண்டும்” என்று மாநில அளவிலான பிரச்சினைகளை எடுத்துரைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சிவசங்கரி, “தொகுதியில் மக்கள் தண்ணீரை கட்டணம் செலுத்தி வாங்குவதை மாற்றி சுத்தமான தண்ணீர் அனைத்து குடியிருப்புக்கும் இலவசமாக விநியோகம் செய்யப்படும்” என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
தியாகராயநகர் சட்டப்பேரவை தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வணிக பகுதிகளில் பல அடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்க வேண்டும், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த சூழலில், தியாகராயநகர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. மூன்றாவது அணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் எந்த கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதை உறுதியாக கணிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.