சென்னை புறநகர் பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக வேளச்சேரி உட்பட 6 தொகுதிகளில் முதல்வர் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உட்பட 6 தொகுதிகளில் முதல்வர் நேற்று வாக்கு சேகரித்தார்.

முதல்வர் பழனிசாமி, வேளச்சேரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக்கை ஆதரித்து நேற்று காந்தி ரோடு பகுதியிலும், சோழிங்கநல்லூர் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தனுக்கு ஆதரவாக ஓஎம்ஆர் சாலையிலும், தாம்பரம் அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையாவை ஆதரித்து கேம்ப் ரோட்டிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் பல்லாவரத்தில் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆலந்தூரில் வளர்மதி, மாதவரத்தில் மூர்த்தி ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுவதும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஒருமித்த கருத்தோடு அதிமுக தலைமையில் இந்த மெகா கூட்டணி, வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும், என் மீதும் வீண் பழி சுமத்தி, அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார். தங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைக் கூறி அவர்கள் வாக்கு கேட்பதில்லை.

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, மக்களை குழப்புவதற்காக திமுகவினர் பொய்யான செய்திகளைச் சொல்லி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக மக்கள் சிந்தித்து முடிவெடுக்க கூடியவர்கள். அதனால் ஸ்டாலின் எவ்வளவு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.

சென்னை மாநகர வளர்ச்சிக்காக விரிவான திட்ட அறிக்கை அதிமுக அரசால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நல்ல சாலை வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, மழைநீர் வடிகால் வசதி ஆகியவை மக்களுக்கு கிடைக்கும்.

சென்னை மாநகரத்தில் மட்டும் 954 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் முன்பு 3,000 இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அதனால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக தற்போது 33 இடங்களில்தான் தண்ணீர் தேங்குகிறது. அதையும் வெளியேற்றுவதற்கு அரசு திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது.

தமிழக மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதிமுக இயக்கம்தான் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கம். அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களிடத்திலே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதால்தான் தொழில் வளமிக்க மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. குற்றங்கள் நடைபெறா வண்ணம் சென்னையில் இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்தி இருக்கிறோம். எந்த இடத்தில் குற்றங்கள் நடந்தாலும் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறை மூலமாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை பெற்று தரப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஜெயலலிதா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் சேலையை, தலைமுடியை பிடித்து இழுத்தார்கள். சட்டம் இயற்றக் கூடிய இடத்திலேயே இப்படி ஒரு அராஜகத்தை நிறைவேற்றியவர்களிடம் ஆட்சியை கொடுத்தால் என்னவாகும் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சமீபத்தில் சட்டப்பேரவையில் திமுக-வின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நேரத்தில் திமுகவினர், அமைச்சர்களின் மேஜையின் மீது ஏறி நடனமாடினார்கள். அதுமட்டுமின்றி சபாநாயகரை கீழே தள்ளி அவரது இருக்கையிலும் அமர்ந்தார்கள்.

திமுக-வின் திண்டுக்கல் லியோனி, தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்களைப்பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதேபோல் தயாநிதி மாறன் பிரதமரையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் பற்றி தரம்கெட்ட வார்த்தைகளால் பேசுகிறார். பெண்களை அவமானப்படுத்தி, கொச்சைப்படுத்தி, கீழ்த்தரமாக பேசும் எண்ணம் படைத்தவர்கள் திமுகவினர்.

உதயநிதி ஸ்டாலின், டிஜிபி-ஐ மிரட்டுகிறார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொச்சைப்படுத்தி பேசிய கட்சி திமுக. தயாநிதி மாறன் தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார். ஆர்.எஸ்.பாரதி, நீதிபதி பதவியே நாங்கள் போட்ட பிச்சை என்கிறார். இப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும். மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றும் அதிமுக அரசு மீண்டும் அமைந்திட வரும் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

SCROLL FOR NEXT