தமிழகம்

திருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன் கைது

செய்திப்பிரிவு

திருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்துச் சென்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கே.கே.நகர், ராணி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரித்விராஜ். சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி இரவு தனது வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆட்டோ திருடுபோனது. பிரித்விராஜ் இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், பிரித்விராஜ் நேற்று முன்தினம் மாலை பரங்கிமலை சென்றிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்றை மறித்து சவாரிக்கு அழைத்தார். உள்ளே அமர்ந்த பின்னர்தான் அது காணாமல்போன தனது ஆட்டோ என்பது தெரிந்தது. ஆனால், அவரது ஆட்டோவின் எண் மாற்றப்பட்டிருந்தது. இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக அங்கிருந்து கே.கே.நகரில் உள்ள தனது வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறி கே.கே.நகர் வந்தார்.

தனது வீட்டருகே வந்து இறங்கியதும் ஆட்டோ ஓட்டுநரை மடக்கிப் பிடித்து ‘திருடன்.. திருடன்..’ என கூச்சலிட்டார். அவரின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு தர்ம அடி கொடுத்தனர். பின்னர், ஆட்டோ ஓட்டுநரை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில், பிடிபட்டவர் நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜ் (38) என்பது தெரிந்தது. பிரித்விராஜின் ஆட்டோவை திருடியதும் இவர்தான் என்பது தெரிந்தது. சவாரிக்கு அழைத்தது யார் என்றே தெரியாமல் ஆட்டோ உரிமையாளரையே ஏற்றி வந்து திருடன் மாட்டிக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT