திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் போட்டியிடும் பல சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் முடிந்த கையோடு, தேர்தல் களத்திலிருந்தே காணாமல் போய்விட்டனர்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தலா 5, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 6 என, மொத்தமுள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 120-க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் தொடங்கிய கடந்த 12-ம் தேதியிலிருந்தே உற்சாக மாக வேட்புமனுக்களை தாக்கல் செய்த னர். 20-ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையின்போதும் பல சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.
22-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர் களை தவிர்த்து சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அனைத்து வேட்பாளர்களின் புகைப்படங்களுடன் கூடிய வேட்புமனுக்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முக்கிய கட்சிகளின் வேட்பாளர் களுக்கு இணையாக சுயேச்சை வேட்பாளர்களும் இணையதளத்தில் இடம் பிடித்திருக்கின்றனர். ஆனால், பல சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருக்கின்றனர்.
பிரச்சாரம் இல்லை
கடந்த தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்களின் ஆட்டோ பிரச்சாரம் தெருவுக்கு தெரு ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆனால் இத் தேர்தலில் அவ்வாறு சுயேச்சை வேட்பாளர்களின் பிரச்சாரத்தை கேட்க முடியவில்லை. தங்கள் சின்னத்தை வாக்காளர் மத்தியில் பிரபலப்படுத்தவும் அவர்கள் முயற்சிக்கவில்லை. ஒரு சிலர் மட்டும் வாகனங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அளவுக்கு தங்களால் செலவு செய்ய முடியாது.
எனவே, தெரிந்த வட்டாரங்களில் ஆதரவு திரட்டி வருவதாக சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
கட்சிகளுக்கு ஆதரவு
“முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சில சுயேச்சை வேட்பாளர்கள் செயல்படுகின்றனர். வாக்குச் சாவடிகளுக்குள்ளும், வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள்ளும் தங்கள் ஆதரவு முகவர்களை அதிகளவில் அனுப்புவதற்கென்றே பல தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சில சுயேச்சை வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யவைத்து ள்ளனர். அவர்கள் எப்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக செலவினம், சுட்டெரிக்கும் வெயில், கரோனா அச்சம் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் சுயேச்சைகள் பலர் களத்திலிருந்து காணாமல் போயிருக்கிறார்கள்.