தமிழகம்

மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு எதிராக வாக்களித்து தண்டனை வழங்க வேண்டும்: இரா.முத்தரசன்

சுப.ஜனநாயகச் செல்வம்

மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பதன் மூலம் தண்டனை வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிம்மக்கல் பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நடைபெறவிருக்கும் தேர்தல் இரு நபர்களுக்கு இடையேயான, இரு கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் அல்ல. வழக்கத்திற்கு மாறான முக்கியமான தேர்தல். ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற உயரிய கொள்கைக்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் யுத்தம். இப்போராட்டத்திற்கு ஒருபக்கம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

அதில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. எதிரணிக்கு மோடி தலைமை தாங்குகிறார். தமிழகத்தில் பாஜக 20 இடங்களில் மட்டும்தான். போட்டியிடுகிறது. ஆனால் அதிமுக பெயரால் பாஜகதான் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது.

சேலத்தில் கடந்த 28ம் தேதி நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு அணியின் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் தலைமையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தி பிடித்து வெற்றி பெறுவோம் என காட்டினோம்.

ஆனால் தாராபுரத்தில் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில், அக்கட்சியினரின் கைகளைப் பிடிக்காமல் மோடி கையை விரித்து விட்டார். இதன் மூலம் நாங்கள் தோற்றுப்போகப்போகிறோம் என்பதை சொல்கிறார். அதன் மூலம் கண்டிப்பாக அந்த அணி தோற்கும்.

தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தும் பறிபோய்க்கொண்டிருக்கிறது. அந்த உரிமைகளை காப்பதற்கு எடப்பாடி அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக மோடி அரசுக்கு அடிமையாக, கொத்தடிமையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30க்கு கொடுக்க முடியும். ஆனால் மத்திய, மாநில அரசின் வரியால் ரூ.100 விலை உயர்ந்துள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கவலை இருக்கிறது. ஆனால் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை அவருக்கு இல்லை. விவசாயிகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

வாக்களிப்பதன் மூலமாகத்தான் மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு தண்டனை வழங்க முடியும். தேர்தல் நாளன்று சொடுக்கும் நேரத்தில் அந்த தண்டனையை வழங்க வேண்டும்.

உதயசூரியன் சின்னமுள்ள பொத்தானைப் பார்த்து அழுத்த வேண்டும். தவறி வேறுபட்டனை அழுத்தினால் வாழ்நாள் முழுவதும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக நேரிடும். எனவே நியாயம் வெற்றி பெற வேண்டும். தர்மம் வெற்றி பெற வேண்டும்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கும் வகையில் மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பிடிஆர்.பழனிவேல் தியாகராசனுக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT