அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காத அளவிற்கு தேர்தல் பணி செய்ய வேண்டும். அதற்கு பிரதமர் மோடியும் நமக்கு உதவி செய்கிறார். எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் திமுகவிற்கு வெற்றிதான், என பழநியில் நடந்த பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெயின்ரோட்டில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
போடியில் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பழநி செல்லும் வழியில் திடீரென ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினார்.
சாலையின் இருபுறமும் நின்றிருந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் இடையே வாக்கு கேட்டு ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணிக்கு ஆதரவு திரட்டினார்.
பகல் 1 மணிக்கு கொளுத்தும்வெயிலில் சாலையில் இறங்கி நடக்கத்தொடங்கியவர் 1.30 மணி வரை தாராபுரம் சாலை சந்திப்பு வரை நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் வேட்பாளர் அர.சக்கரபாணி, திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் நடந்துசென்றனர். இளைஞர்கள் ஆர்வமாக ஓடிவந்து ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து பழநி சென்றவர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு பழநி பேருந்துநிலையம் அருகே திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:
திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர். சர்க்கஸ் நிகழ்ச்சியில் சிரிக்க வைப்பவர் போல திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாம் பொய் என்று ஒத்துக்கொண்டவர் சீனிவாசனால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்தவொரு பயனும் கிடையாது. திண்டுக்கல் நகரை மாநகராட்சியாக உயர்த்தியும் மாநகராட்சிக்கான எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை.
குடிமராமத்துப் பணியில் பணத்தை கொள்ளையடித்ததுதான் மிச்சம் என்றும், எனவே திண்டுக்கல் சீனிவாசனை வீட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு என்று சாதகமாக வந்தாலும் திமுகவினர் பணி செய்யாமல் இருந்துவிடக்கூடாது.
அதிமுகவினர் வெற்றிபெற்றால் அதிமுகவினராக இருக்கமாட்டார்கள், பாஜகவினராக தான் இருப்பார்கள். அதற்கு உதாரணம் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் தான். எனவே அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காத அளவிற்கு தேர்தல் பணிசெய்யவேண்டும். அதற்கு பிரதமர் மோடியும் நமக்கு உதவி செய்கிறார். எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் திமுகவிற்கு வெற்றிதான்.
தாராபுரம் வந்த பிரதமர் மோடி உண்மையைச் சொல்லாமல் பொய்யை சொல்லி விட்டு சென்றுள்ளார். பிரதமர் உண்மையை தெரிந்து பேச வேண்டும். எழுதிக் கொடுத்ததை எல்லாம் பேசிச்சென்றால் அவர் பிரதமர் கிடையாது.
திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற மோடிக்கு பொள்ளாச்சி பெண்கள் பாலியல் விவகாரம் தெரியாதா?. இதை எல்லாம் பிரதமராக இருக்கும் மோடிக்கு தெரியாதா?. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவினரின் ஊழலை கண்டுபிடித்து மக்களிடம் அம்பலப்படுத்துவது தான் ஸ்டாலினின் வேலை.
வருகிற சட்டமன்ற தேர்தலில் 234தொகுதியிலும் திமுகதான் வெற்றிபெறும். அதிமுக எதிர்கட்சி வரிசையில் கூட உட்காரமுடியாது. இந்த தேர்தலுடன் அதிமுக முடிந்துவிட்டது.
திமுக ஆட்சி அமைந்தவுடன் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் இயற்றப்படும், தமிழகத்தின் சுய மரியாதையை, தன்மானத்தை காப்பாற்ற திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால்தான் நமது நோக்கம் நிறைவேறும் என்றும் தெரிவித்தார்.