குஷ்பு: கோப்புப்படம் 
தமிழகம்

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.1 லட்சம் வைப்புத்தொகை: குஷ்பு வாக்குறுதி

செய்திப்பிரிவு

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பாக எழிலனும், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக குஷ்புவும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதிக்கென, எழிலன் தனியே தேர்தல் அறிக்கை தயாரித்து விநியோகித்துள்ளார். இந்நிலையில், பாஜக சார்பில் குஷ்புவும் தனி தேர்தல் அறிக்கை தயாரித்து இன்று (மார்ச் 31) அதனை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும். தொகுதி நிதியில் ஏறத்தாழ 70% பெண்கள் மேம்பாட்டுக்காகச் செலவிடப்படும். தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

பெண் குழந்தை பிறந்தால் இன்றும் சமுதாயத்தில் பாரமாக நினைக்கின்றனர். எனவே, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி உடனடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அந்தக் குழந்தை வளர வளர படிப்புச் செலவுக்கு அத்தொகை உதவும்" என்று குஷ்பு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT