நாங்கள் நியாயமானவர்கள் என்பதால் முதல்வரின் தாயை விமர்சித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டோம். ஆனால், பொள்ளாச்சி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மேடையில் இருந்த முதல்வரிடம் பிரதமர் மோடி கேட்டாரா? கத்வாவில் கோயிலில் சிறுமியை அடைத்துவைத்துக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது பிரதமர் மோடி என்ன செய்தார்? என ராமநாதபுரம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கத்திற்கு ஆதரவாக திருப்புல்லாணியில் திமுக மாநில மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்குத் திரளான தொண்டர்கள் கூடி நின்று வரவேற்பளித்தனர்.
அப்போது கனிமொழி பேசியதாவது:
''திமுகவினர் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திவிட்டதாகப் பிரதமர் கூறியுள்ளார். முதல்வரின் தாயை விமர்சித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டோம். திமுக தலைவர் ஸ்டாலின் அதைக் கண்டித்துவிட்டார். நாங்கள் நேர்மையுள்ளவர்கள், நியாயமானவர்கள் என்பதால்தான் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டோம். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸ் என்ற இடத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு ஒரு பெண் பாஜக எம்எல்ஏவால் கொல்லப்பட்டார். ஆனால், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றவாளிகளைப் பாதுகாத்தார். கத்வாவில் கோயிலில் சிறுமியை அடைத்துவைத்துக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது பிரதமர் மோடி என்ன செய்தார்?
உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார். இச்செயல் பெண்களை அவமதிக்கவில்லையா? பொள்ளாச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. பொள்ளாச்சி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மேடையில் இருந்த முதல்வரிடம் பிரதமர் மோடி கேட்டாரா?
சோனியா காந்தி உள்ளிட்ட பெண்களை ஹெச்.ராஜா கொச்சைப்படுத்திப் பேசி வருகிறார். இவர்களையெல்லாம் தட்டிக் கேட்கப் பிரதமருக்கு திராணி இல்லை, தைரியம் இல்லை. ஆனால், நேற்று ஆணாதிக்கத்தின் உச்சத்தில் இருந்து பிரதமர் பேசியுள்ளார்''.
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.