பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

ஏப்.4 வரை 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்; திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்கவும்: வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

இன்று முதல் ஏப்.4 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, புவியரசன் இன்று (மார்ச் 31) வெளியிட்ட அறிவிப்பு:

"சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக, தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

இன்று முதல் 04.04.2021 வரை: தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதி நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இதன் காரணமாக, ஒருசில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், ஊர்வலம் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டி மீட்டரில்): ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக இன்று மற்றும் நாளை: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

01.04.2021, 02.04.2021: குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இரு பகுதிகளுக்கும் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in இணையதளத்தைக் காணவும்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT