ஓசூரில் வேலைக்கு செல்லும் பெண்கள் பயன்பெறும் வகையில், அரசு மகளிர் விடுதி கட்ட வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறு வனங்கள், சிறிய அளவிலான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பெண்கள் அதிகளவில் பணியாற்று கின்றனர். இவர்களில் பெரும்பாலான வர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை வேலைக்கு தகுந்தவாறு ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள், தங்குவதற்கும், உணவிற்காக மட்டுமே அவர்கள்து ஊதியத்தின் பெரும்பகுதி செலவாகிறது.
இதனால் வேலை கிடைத்தும், வறுமை நிலையில் இருந்து மீள முடியாமல் தவித்து வருவதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுமட்டுமில்லாமல், பெங்களூர் நகரங்களில் பணிபுரியும் பல பெண்கள் அங்கு வாடகை அதிகம் என்பதால், பெண்கள் ஒன்று சேர்ந்து ஓசூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வருகின்றனர்.
பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் தங்கும் விடுதி கட்ட வேண்டும் என பெண்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ஓசூரைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குழு உறுப்பினரும், சமூக சேவகியுமான ராதா கூறியதாவது:
ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளில் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் பணி புரிந்து வருகின்றனர். அவர்களது மாதச் சம்பளம் தங்குவதற்கும், உணவுக்கும் மட்டுமே போதுமானதாக உள்ளது. அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே அல்லல்படும் பெண்கள் பயன்பெறும் வகையில், ஓசூரில் அரசு சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய விடுதி கட்ட வேண்டும்.
கடந்த 1996-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, ஓசூரில் விடுதி கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 93 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டும் திட்டம் கிடப்பில் உள்ளதாகத் தெரிகிறது. எனவே, இங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களின் நலனுக்காக மகளிர் விடுதி கட்டுவதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.