தமிழகம்

மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யாத அதிமுக தோல்வியடையும்: துரை வையாபுரி

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளரின் மகன் துரை வையாபுரி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் இன்று காலை, ராஜீவ் நகர்ப் பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து உள்ளேன். குறிப்பாக சாத்தூர் தொகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்றுள்ளேன்.

அங்கு மக்களுக்கு குடிநீர், சாலைகள், கழிவுநீர் வடிகால் வசதி, பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்யவில்லை.

இதனால் பெண்கள் ஆதங்கத்தில் உள்ளனர். அவர்கள் ஏற்கெனவே முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆளுங்கட்சி பண பலத்தை மட்டுமே நம்புகிறது.

ஆனால் கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.

தமிழகம் முழுவதும் மதிமுக நிர்வாகிகள் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் முழுமூச்சாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். வைகோ கூறிய வார்த்தைகளுக்காக கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.

நான் சாத்தூர் தொகுதியில் அதிகளவு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். அங்கு எம்எல்ஏ ரகுராமன் இருந்தாலும் என்னுடைய பங்களிப்பு இருக்கும் எனத் தெரிவித்துள்ளேன்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் எவ்வாறு செயல்பட வேண்டும், எம்எல்ஏ எப்படி பேச வேண்டும், என்னமாதிரியான மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும், அலுவலகத்துக்கு வரும் மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது பெரிய குறையாக உள்ளது. மிகப்பெரிய ஏமாற்றத்தில் உள்ள மக்களிடையே கொஞ்சம் கடுமையாக உழைத்து, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் நம்மைத் தேடி அவர்கள் வருவார்கள். என்னைப் பொறுத்தவரை என்னுடைய மக்கள் பணி சாத்தூர் தொகுதியில் தொடங்கும்.

கோவில்பட்டி மக்களுக்கு வைகோவின் பணி குறித்து நன்றாகத் தெரியும். அவர் எம்பியாக இருக்கும்போது, இந்தியாவிலேயே 12 மேம்பாலங்கள் வரைதான் ரயில்வே துறை அனுமதி வழங்கியது. 3 மேம்பாலங்கள் கோவில்பட்டிக்கு வழங்கப்பட்டது. இதுபோல ஏராளமான பணிகளை செய்துள்ளார்.

தற்போது மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசன் எளிமையாக அணுகக்கூடிய நபர். அவர் 2 முறை நகர் மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கரை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்.

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தனது 40 ஆண்டுகால மக்கள் பணி, மக்கள் தொண்டை நம்பி களத்தில் நிற்கிறார்.

ஆனால் எதிரணியில் நிற்கும் இருவர் 2 விஷயங்களை செய்கின்றனர். அது ஒன்று பணம், மற்றொன்று சாதி. 2021-ம் ஆண்டில் நாம் உள்ளோம். படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பணம், சாதி பின்னால் நமக்கு சோறு போடாது என்பது மக்களுக்குப் புரிய வேண்டும். சீனிவாசனைப் போன்ற மக்கள் தொண்டனை கோவில்பட்டி தொகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார் அவர்.

SCROLL FOR NEXT