திருவாரூர் அருகே, வேலங்குடி சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.58 கோடி ரொக்கப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திருவாரூர் மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் நேற்றிரவு வேலங்குடி சோதனைச் சாவடியில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கொல்லுமாங்குடியிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற பிஎம்எஸ் இன்போ சிஸ்டம் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய சரக்கு வாகனம் ஒன்று சென்றது.
அதனை சோதனையிட்டபோது அதில் ரூ.1.58 கோடி ரொக்கப் பணம் இருந்தது.
அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் பணத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், நன்னிலம் தேர்தல் பறக்கும் படை மூலமாக நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.