விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படக் கூடியது அதிமுக அரசு என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்காரத் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், கோவை கணபதியில் நேற்று (30-ம் தேதி) இரவு நடந்தது.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பிரகாஷ் காரத் கலந்து கொண்டு பேசும் போது,‘‘ தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ளது.
இத்தேர்தல் தமிழகத்துக்கு முக்கியத் தேர்தல் ஆகும். இத்தேர்தல் மூலம் தமிழக மக்களுக்கு பொறுப்பான, மக்களுக்கு பதில் அளிக்கக்கூடிய வகையில் நடந்து கொள்ளும், தமிழக மக்களின் நலன்களை காக்கக் கூடிய சுயேச்சை அரசாக அமைய வேண்டுமா அல்லது டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி, பாஜக , ஆர்.எஸ்.எஸ் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அடிமை அரசு வர வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
தற்போதைய முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, அடிமை அரசு ஆகும். தமிழகத்தை இந்த அடிமை அரசிடம் இருந்து மீட்க ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் தேர்தல் களத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா காலத்திலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொது முடக்கக் காலத்திலும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலை வாய்ப்பை பறிகொடுத்துள்ளனர். தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது, நரேந்திர மோடி அரசு ஒன்றன் பின் ஒன்றாக சுமைகளை ஏற்றியது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தனர். இதற்கு அதிமுக எம்.பி.க்கள் உறுதுணையாக இருந்தனர்.
விவசாயத்தை கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பது தான் வேளாண் சட்டங்களின் நோக்கம்.தமிழக விவசாயிகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, வேளாண் சட்டங்களுக்கு துணை போனவர்கள் அதிமுக எம்.பிக்கள். இவர்கள் பாஜகவின் ஏஜென்டுகளாக உள்ளனர்.
2019-ம் ஆண்டு சம்பள ட்டத் தொகுப்பையும், அதைத் தொடர்ந்து 3 தொழிலாளர் விரோதச் சட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்றியது. இதன் மூலம் தொழிலாளர் அமைப்புகள் போராடி பெற்ற 29 சட்டங்கள், 4 சட்டங்களாக சுருக்கப்படுகின்றன. இச்சட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் தங்களது உரிமையை இழக்கின்றனர். இந்த சட்டத்துக்கு துணை போனது அதிமுக எம்.பி.க்கள்.
விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படக் கூடியது தான் அதிமுக அரசு. இவ்வாறு செயல்படுவதற்கு அவர்களுக்கு மனது உறுத்த வேண்டும். ஆனால், பாஜக ஆணைப்படி அதிமுக அரசு செயல்படுகிறது. கரோனா காலத்தில் 16 எதிர்க்கட்சிகள் சேர்ந்து,ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.7,500 நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் அரசிடம் வலியுறுத்தியும் அவர்கள் செயல்படுத்தவில்லை. அதற்கு பதில் மக்கள் மீது சுமையை ஏற்றுகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகின்றனர். சுதந்திர இந்தியா நரேந்திர மோடி போன்ற மக்கள் விரோத அரசை சந்தித்தது இல்லை. மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கின்றனர். இதுகுறித்து கேட்க முதுகெலும்பு இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கோவை வடக்கு திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, பி.ஆர்.நடராஜன் எம்.பி, காங்கிரஸ் செயல் தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான மயூரா ஜெயக்குமார், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.