காரைக்குடியில் அமமுகவினரி்ன் வாகனப் பிரச்சார இரைச்சலால் கோபம் அடைந்த பாஜகவின் காயத்ரி ரகுராம், ‘பிரஷர் தாங்காமல் குக்கர் வெடிக்கப் போகுது’ என பேசினாா்.
காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் அவர்களை சிறையில்தான் போய் பார்க்க வேண்டும். ஹெச்.ராஜா ஆவேசமாக பேசினாலும் உண்மையாக, நல்லதை பேசக்கூடியவர். திமுகவின் ஆ. ராசா பெண்களை மிகக் கேவலமாகப் பேசியுள்ளார். ஏற்கெனவே சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை திமுகவினர் தாக்கினர். சக்தி வாய்ந்த பெண்ணுக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் நிலையை நினைத்து பாருங்கள் என்றார். கணேசபுரத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் அமமுகவினர் வாகனத்தில் ஒலிபெருக்கியை ஒலிக்க விட்டபடி பிரச்சாரம் செய்தனர். இந்த இரைச்சலால் கடுப்பான காயத்ரி ரகுராம், ‘பிரஷர் தாங்காமல் குக்கர் வெடிக்கப் போகுது பாருங்க..!’ என்றார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.