விருத்தாசலத்தில் அமமுக - தேமுதிக கூட்டணி சார்பில் களம் காண்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. கடந்த 10 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், பட்டியலினத்தைச் சேர்ந்தோர் வசிக்கும் பகுதிகளில், பிரச்சாரத்திற்குச் செல்லும் போது அங்குள்ள சிலர், தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்படி கேட்க, ‘பிரபாகரன்’, ‘விஜய்‘, ‘சத்ரியன்’ என பிரேமலதா பெயர் சூட்டி வருகிறார்.
அந்த வகையில் நேற்று முன்தினம் புதுகூரைப்பேட்டை கிராமத்தை அடுத்த குப்பநத்தம் குடியிருப்புப் பகுதியில் ஒரு குழந்தைக்கும், தே.புடையூர் கிராமப் குடியிருப்புப் பகுதியில் ஒரு குழந்தைக்கும் ‘சத்ரியன்’ என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
‘சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, களப்பிர, சம்புவராய கடையேழு வள்ளல்கள், நாயக்கர், சத்திரியர்,வேளிர் வழிவந்தவர்கள்’ என்று தமிழகத்தில் ஒரு சாரார் தங்களை குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரேமலதா இப்படி ‘சத்ரியன்’ என பெயர் வைப்பதில் உள்நோக்கம் இருப்பதாக அந்த ஒரு சாராரில் இருந்து வெகு சிலர் ஆவேசப்படுகின்றனர்.
இது தொடர்பாக பாமக சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவரும், விருத்தாசலம் முன்னாள் பாமக சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.கோவிந்தசாமியிடம் கேட்டபோது, “பிரேமலதா சில நாடகங்களை அரங்கேற்றுகிறார். நாங்கள் இதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை” என்றார். இதுபற்றி தேமுதிகவினரிடம் கேட்டபோது, “விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ திரைப்பட கதாபாத்திர அடிப்படையில் தான் பெயர் வைக்கப்பட்டதே தவிர, இதில் எந்த உள்நோக்கமும் எங்களுக்கு கிடையாது” என்கின்றனர்.