தமிழகம்

தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தரவேண்டும்: அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு

செய்திப்பிரிவு

தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும் முக்கிய தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக தேசியத் தலைவர்கள் தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தனர். 2 நாட்கள் முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தாராபுரம், புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுபிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங்,காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் பிரச்சாரத்துக்காக தமிழகம் வர உள்ளனர்.

இந்நிலையில், “பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 3 அடுக்குபாதுகாப்பை மேலும் பலப்படுத்தவேண்டும். முக்கிய தலைவர்கள் தொடர்ந்து தமிழகம் வருகின்றனர். அவர்களது பாதுகாப்பில் அலட்சியம் காட்டக் கூடாது. அவர்களது பயண விவரங்கள், கடைசி நேரத்தில் மாற்றப்படும் பயண விவரங்களை கூடுதல் கவனம் எடுத்துஆய்வு செய்து, உரிய பாதுகாப்புவழங்க வேண்டும். சந்தேகத்துக்குரிய இடங்களில் அவர்களது பிரச்சாரத்தை தவிர்க்கச் செய்துவிடலாம்’’ என்று அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபிதிரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT