கடந்த 20 ஆண்டுகளாக அதிமுக வசம் இருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மிகப் பெரிய தொகுதி பல்லடம். 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
பல்லடம் தொகுதியில் பிரதானத் தொழில்களாக, கறிக்கோழி பண்ணை, விசைத்தறிக் கூடங்கள், நூற்பாலைகள் மற்றும் விவசாயம் போன்றவை உள்ளன. பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளும், 28 ஊராட்சிகளையும் இத்தொகுதி உள்ளடக்கியது. திருப்பூர் மாநகராட்சியின் 10 வார்டுகளும் தொகுதிக்குள் வருகின்றன.
முதலிபாளையம், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, முத்தணம்பாளையம், இடுவாய், உகாயனூர், தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அலகுமலை, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், பொங்கலூர், மடப்பூர், காட்டூர், வி.கள்ளிபாளையம், எலவந்தி, கேத்தனூர், வாவிபாளையம் மற்றும் வி.வடமலைபாளையம் கிராமங்கள், ஆண்டிபாளையம், மங்கலம், முருகம்பாளையம், மற்றும்வீரபாண்டி, பல்லடம் வட்டத்தில்பூமலூர், வேலம்பாளையம், நாரணாபுரம், கரைப்புதூர், கணபதிபாளையம், பல்லடம், கக்கம்பாளையம், இச்சிப்பட்டி, கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி, வடுகபாளையம், அனுப்பட்டி, அய்யம்பாளையம், கரடிவாவி, பருவை,மல்லேகவுண்டன் பாளையம், புளியம்பட்டி மற்றும் கே.கிருஷ்ணபுரம் கிராமங்கள், செம்மிபாளையம் மற்றும் பல்லடம் நகராட்சி பகுதிகள் அடங்கி உள்ளன. கொங்கு வேளாளர், தலித், நாயக்கர், முஸ்லிம் இன மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஊராட்சிப் பகுதிகளில் சாலைகள், நிழற்குடைகள், நியாய விலைக்கடை கட்டிடங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசுக் கல்லூரி 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.
முக்கியப் பிரச்சினைகள்
பல்லடம் பகுதியில் விசைத்தறி தொழிலை நலிவடையச் செய்யும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காடாத் துணிகளை விற்பதற்கு, தனிச்சந்தை உருவாக்க வேண்டும். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் பெற்ற ரூ.65 கோடி கடனை தள்ளுபடி செய்யவேண்டும். பண்ணைகளில் கறிக்கோழிகளை வளர்க்க இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மானியத்தில் தீவனங்கள் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இங்குள்ள விசைத்தறி மற்றும் கறிக்கோழி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் முன்வைக்கின்றனர்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுச்சாலை அமைத்து, போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும்.
பல்லடம்-திருச்சி தேசியநெடுஞ் சாலையில் விபத்துகளை குறைக்கும் விதமாக சாலை மையத் தடுப்புகள் அமைக்க வேண்டும். பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாநகர் தொடங்கி- பனப்பாளையம் பிரிவு வரை மேம்பாலம் அமைக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும்.
ஆண்டுக் கணக்கில்கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் மின் மயானக் கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும். பல்லடம் தெற்கு பகுதி கிராமங்களான காமநாயக்கன்பாளையம், பணிக்கம்பட்டி, வெங்கிட்டாபுரம், அனுப்பட்டி, அய்யம்பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கும் பிஏபி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன மற்ற சில கோரிக்கைகள். இத்தொகுதியில் 1996-ம் ஆண்டுக்கு பிறகு திமுக வெற்றிபெறவில்லை. 20 ஆண்டுகளாக தங்கள்வசம் உள்ள தொகுதியை தக்க வைக்கஅதிமுகவும்,தொகுதியை கைப்பற்றும் முனைப்புடன் திமுக கூட்டணியினரும் தீவிர களப் பணியாற்றி வருகின்றனர்.