முதல்வர் விட்ட கண்ணீருக்கு திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார்.
மதுரை திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த குதிரைச் சாரிகுலம், இந்திரா காலனி, கீழஉரப்பனூர், மேல உரப்பனூர், பள்ளக்காபட்டி, சித்தாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது மகள் ப்ரியதர்ஷினி தனது தந்தைக்காக வாக்குச் சேகரித்தார்.
பிரச்சாரத்தின்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
முதல்வரின் தாயைப் பற்றி வாய்க்கு வந்தபடி திமுகவினர் பேசி அவரை கண்கலங்க வைத்துள்ளனர். முதல்வர் சிந்திய கண்ணீருக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
ஒரு முதல்வரையே இப்படி பேசியவர்கள் சாதாரண மக்களை எப்படி பேசுவார்கள் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். கரோனா காலத்தில் எல்லா மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் தமிழ கம் மட்டுமே அந்த நோயைத் தடுப்பதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.