திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பரணிராஜனை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் மதுரை அவனியாபுரத்தில் நேற்று பேசியதாவது:
நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளர்களுக்கு தொழில், வசதி எல்லாம் இருக்கிறது. இவர்கள் மக்களுக்கு கடமையைச் செய்ய வேண்டும் என நினைத்து வந்தவர்கள். அதில் நானும் ஒருவர்.
இப்பகுதியில் தொழிற் சாலைகள், ஐ.டி. நிறுவனங்களைக் கொண்டு வர வேண்டியது எங்களது பொறுப்பு. அனைத்து வார்டுகளிலும் தடையற்ற குடிநீர் வழங்க என்னென்ன உதவி செய்ய வேண்டுமோ செய்வோம்.
பணம் வாங்குவதால் உங்களது ஏழ்மை போகாது. அன்று ஒருநாள் மட்டும் வாழ்நாளுக்கு சாப்பாடு போட்டதாக அர்த்தமில்லை. 5 வருடத்துக்கு ஒருமுறை ரூ.5 ஆயிரம் கொடுத்துவிட்டு உங் களது வாழ்க்கையை குத்தகைக்கு எடுக்கும் கூட்டம். இதை மாறிமாறிச் செய்து மக்களை ஏமாற்று கிறார்கள். அதை நாங்கள் செய்ய வரவில்லை. தமிழக அரசியலை புரட்டிப்போட வந்திருக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சி. இந்தத் தொகுதியில் விளையாட்டு மைதானம் நம் பிள்ளைகளுக்கு அமைக்கப்பட வேண்டும். பேருந்து வசதிகள் இல்லாத பகுதிக்கு பேருந்து வசதி வந்து சேரும். நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. அதை வெகு தீவிரமாகச் செய்வோம்.
ஊழல் கட்சி ஆண்டு கொண்டி ருக்கிறது. அதற்கு மாற்று மற் றொரு ஊழல் கட்சியல்ல. அதற்கு மாற்று நேர்மையான கட்சிதான். வன்முறையாளர்களை ஒடுக்குவதற்கு சட்டத்தைத்தான் கையிலெடுக்க வேண்டும். புதிதாக ஓட்டுப்போட வருகிறவர்கள் புதிதாக அரசியலை புரட்டிப்போட வருகிறார்கள். அதை அவர்கள் செய்து காண்பிக்க வேண்டும். மத நல்லிணக்கம், சிறுபான்மையினர் பாதுகாப்பு ஆகியவற்றை நிஜமாகவே செய்யப்போகும் கட்சி மநீம. ஏப்ரல் 6-ம்தேதி நீங்கள் கொடுக்கும் தீர்ப்பு தமிழக அரசியலை திருப்பிப்போட வேண்டும். அதற்கான வேலையைச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின்போது சமத்துவ மக்கள் கட்சியின் ராதிகா சரத்குமார் தனி வேனில் நின்று ஆதரவு திரட்டினார்.