தமிழகம்

சென்னையில் வெள்ளத்துக்குப் பிறகு பாம்புகள் பிரச்சினை

எஸ்.பூர்வஜா

சென்னையில் தாழ்வாக உள்ள பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ள நிலையில், தண்ணீரில் இருந்து பாம்புகள் பலவும் அச்சறுத்தலாக இருக்கின்றன.

தாம்பரம், முடிச்சூர், மடிப்பாக்கம், துரைப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளில் வெள்ளநீர் நிரம்பியுள்ளது. தண்ணீர் வற்றியவுடன் பாம்புகள் தென்பட வாய்ப்பிருப்பதாக விலங்கு மீட்பாளர் நிஷாந்த் ரவி என்பவர் தெரிவித்தார்.

நீரை விட வறண்ட சூழலில் பாம்புகள் ஆக்ரோஷமானவை என்று கூறும் நிஷாந்த் ரவி, “முடிச்சூர் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது வெள்ள நீரில் நூற்றுக்கணக்கான பாம்புகளை கண்டுபிடித்தோம். மக்கள் இது குறித்து பதற்றமடையத் தேவையில்லை, தண்ணீரில் செல்லும் போது பெரிய குச்சிகளைக் கையில் வைத்துக் கொண்டால் போதுமானது.

ஆனால், உண்மையான சவால் என்னவெனில் வெள்ள நீர் வற்றிய பிறகுதான் காத்திருக்கிறது. நிறைய புழு பூச்சிகள் இருக்கும், மேலும் நீர் வற்றிய பிறகே பாம்புகள் இருப்பது கண்களுக்குத் தெரியும்” என்றார்.

வனத்துறை அதிகாரி எஸ்.டேவிட்ராஜ் கூறும்போது, பாம்புகளைக் கண்டால் தொலைபேசியில் தொடர்பு கொள்ள அளித்திருந்த உதவி எண்ணுக்கு கடந்த சில நாட்களாக தினசரி 35 முதல் 40 அழைப்புகள் வந்தன. சாதாரண நாட்களுக்கு எங்களுக்கு வரும் அழைப்பை விட இது சற்று அதிகமே என்றார்.

நோலாம்பூர், அண்ணாநகர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த அழைப்புகளுக்கு பதில் அளித்த அன்பழகன் என்ற விலங்கு மீட்பாளர், “கடந்த சில மழை நாட்களில் பல்வேறு வகையான பாம்புகளை பிடித்துள்ளோம்” என்றார்.

வீடுகள், கட்டிடங்கள், குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதர் மண்ட விடாமல் சுத்தமாக வைத்திருக்க இவர்கள் அனைவரும் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT