தமிழகம்

தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதால் அழுது புலம்பும் முதல்வர், அமைச்சர்கள்: திண்டுக்கல் ஐ.லியோனி கிண்டல்

செய்திப்பிரிவு

தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டதால் முதல்வர் பழனிசாமி தொடங்கி அமைச்சர்கள் எல்லாம் ஊர், ஊராகச் சென்று அழுது புலம்புகின்றனர் என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து பத்தாளப்பேட்டை, குண்டூர் உள்ளிட்ட பகுதியில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மக்கள் நலனில் கொஞ்சம்கூட அக்கறை காட்டவில்லை. கொண்டு வந்த திட்டங்கள் எல்லாமே, மக்களுக்கு எதிரானவை. மக்களுக்கு எதையும் செய்யாததால், இப்போது தேர்தல் தோல்வி பயத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி அமைச்சர்கள் எல்லாம் ஊர், ஊராகச் சென்று அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

‘மக்களுக்காக உயிரையும் கொடுக்க தயார்’ என முதல்வர் பழனிசாமி கண்ணீர் வடிக்கிறார். விராலிமலையில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனக்கு பிரஷ்ஷர், சுகர் வந்துவிட்டாக கூறி அழுகிறார்.

மதுரையில் செல்லூர் ராஜூ அழுகிறார். கரூரில் எம்.ஆர் விஜயபாஸ்கர் அழுகிறார்.

நீட் தேர்வால் 16 பேர் தற்கொலை செய்தபோது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தபோது வராத அழுகை, இப்போது வருகிறது. போலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. திருவெறும்பூர் தொகுதியில் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெறுவார் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஓ. நீலமேகம் மற்றும் மதசார்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT