தமிழகம்

தபால் வாக்குக்காக போலீஸார் பணம் பெற்ற விவகாரம் - திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இடமாற்றம்: பொன்மலை உதவி ஆணையர் பணியிடை நீக்கம்; சிறப்பு எஸ்.ஐ, பெண் காவலரிடம் சிபிசிஐடி விசாரணை

செய்திப்பிரிவு

திருச்சியில் தபால் வாக்குக்காக போலீஸார் பணம் பெற்ற விவகாரத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையரை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நேற்றிரவு உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிக்கியுள்ள சிறப்பு எஸ்.ஐ, பெண் தலைமைக் காவலரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸார், தங்களுக்கு சாதகமாக தபால் வாக்கு அளிப்பதற்காக திமுக வழக்கறிஞர் மூலம் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரின்பேரில் 8 காவல் நிலையங்களில் காவல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் அண்மையில் சோதனை நடத்தினர். அப்போது 2 காவல் நிலையங்களில் இருந்து ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து காவல்நிலைய ரைட்டர்களான சிறப்பு காவல் ஆய்வாளர் பாலாஜி, தலைமைக் காவலர் சுகந்தி ஆகியோர் மீதும், அவர்களுக்கு பணம் அளித்ததாக திமுக வழக்கறிஞர் மணிவண்ண பாரதி உள்ளிட்ட 3 பேர் மீதும் மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் தில்லை நகர், அரசு மருத்துவமனை ஆகிய காவல் நிலையங்களுக்குச் சென்று, சிசிடிவி கேமரா பதிவுகளையும் சேகரித்தனர்.

அதனடிப்படையில் வழக்கில் சிக்கியுள்ள சிறப்பு காவல் ஆய்வாளர் பாலாஜி, தலைமைக் காவலர் சுகந்தி ஆகியோரிடம் நேற்று மன்னார்புரம் காஜாநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில்தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மணிவண்ண பாரதியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதனை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றியும், பொன்மலை சரக உதவி ஆணையர் தமிழ்மாறனை பணியிடை நீக்கம் செய்தும் தேர்தல் ஆணையம் நேற்றிரவு உத்தரவிட்டுள்ளது.

கைதை மறைத்த காவல்துறை

இதற்கிடையே தபால் வாக்குக்கான பணத்தைப் பெற்றுக் கொண்ட ரைட்டர்களான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலாஜி(அரசு மருத்துவமனை), தலைமை காவலர் சுகந்தி (தில்லைநகர்) ஆகியோரை அன்றிரவே மாநகர குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, இரவோடு இரவாக அவர்களை பிணையில் விடுவித்தது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சில உண்மைகளை மறைக்க முயற்சி செய்வதாக மாநகர காவல்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இவ்வழக்கில் சிறப்பு எஸ்.ஐ, பெண் காவலர் கைது செய்யப்பட்ட விவரத்தைக்கூட வெளியில் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT