தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை சுகாதாரத்துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்கவும், அந்த மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரத்து, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி, 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.