மத்திய அரசுக்கு ஆமாம்போடும் அரசாக அதிமுக உள்ளது என திருமங்கலம் கள்ளிக்குடியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பேசினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் திமுக வேட்பாளர் எம்.மணிமாறனை ஆதரித்து திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமார் பாரத் டெண்டர் கோரியதில் சரியான நிறுவனம் இல்லை எனக்கூறி மத்திய அரசு டெண்டரை ரத்து செய்தது. இங்கு நடைபெறுவது அதிமுக ஆட்சியல்ல. பாஜகவின் பினாமி ஆட்சி. தமிழ்க் கலாச்சாரத்தை மொத்தமாக டெல்லியில் கொண்டுபோய் அடகுவைத்துவிட்டனர். மத்திய அரசு எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அதை அப்படியே ஆமாம் போட்டு வரவேற்கின்றனர்.
விவசாயிகளை பாதிக்கக்கூடிய விவசாய திருத்தச் சட்டம், குடியுரிமைச் சட்டம் நிறைவேற்ற அதிமுக அரசு ஆதரவு கொடுத்தது. தற்போது அதே சட்டத்தை தேர்தலுக்காக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழக முதல்வர் கூறி வருகிறார். ச
ந்தர்ப்பத்திற்கேற்றவாறு மாறி மாறி பேசிவருகிறார்.
அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது. திருமங்கலத்தில் உள்ள அமைச்சர் துறையிலேயே 4 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்பமுடியவில்லை.
உசிலம்பட்டி அருகே 58 கிராம கால்வாய் கட்டிய சில தினங்களிலேயே உடைந்தது. அதற்கு அமைச்சர் கூறிய விளக்கம் காட்டுப்பன்றிகள் உடைத்துவிட்டது என்றார். அதிமுக அமைச்சர்கள் அனைவரும் விஞ்ஞானிகளாக உள்ளனர்.
கருணாநிதி பல்வேறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தார். அந்த கல்லூரியில் படிக்க விடாத அளவிற்கு நீட் தேர்வை கொண்டு வந்தது அதிமுக அரசு. மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
மாணவர்கள் வாழ்வில் வளம் பெற உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இந்த ஆட்சியில் பெண்களுக்கும், போலீஸ் அதிகாரிக்கும் பாதுகாப்பு இல்லை.
இந்த ஆட்சியில் சொன்ன திட்டங்கள் எதையும் செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் பேசினார்.