பழநியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி.  
தமிழகம்

பொருளாதார தாக்குதல், மதவாத தாக்குதல் என இருபுறமும் பாஜக அரசு தாக்குதல் நடத்தி வருகிறது: சீத்தாராம் யெச்சூரி பேச்சு 

பி.டி.ரவிச்சந்திரன்

ஒருபுறம் பொருளாதார தாக்குதல், மறுபுறம் மதவாத தாக்குதல் என்‌று இரண்டு பக்கங்களிலும் பாஜக தாக்குதல் நடத்திவருகிறது. மோடி ஒன்றும் வீழ்த்த முடியாத சக்தியல்ல, என மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதியில் திமுக இ.பெ.செந்தில்குமாரை ஆதரித்து மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பழநியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் பேசியதாவது:

தமிழர்களின் வாழ்வோடும் கலாச்சாரத்தோடும்‌ கலந்துள்ள தமிழ்க்கடவுள் முருகன் இருக்கும் பழனியில் பேச வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மனித நேயத்தில் நம்பிக்கை இருப்பதால்தான் தமிழகம்‌ சிறந்து விளங்குகிறது. அந்த மனித நேயத்தை சிதைப்பதற்காகவே பாஜ கட்சி பணிபுரிகிறது.

அதற்கு அதிமுக உதவுகிறது. திமுக வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு தமிழகத்தைப் பாதுகாக்க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய உதவும். இந்திய கலாச்சாரம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான்.

ஆனால் பாஜக மொழி, கலாச்சாரம், பண்பாடு என்று அனைத்திலும் ஒருமுக கலாச்சாரத்தை கொண்டு வரத்துடிக்கிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பாஜகவிற்கு அதிமுகவின் இரட்டைத் தலைமையும் ஒத்து ஊதுகிறது.

தமிழர்களின் தாய்மொழியான தமிழை சிதைக்க மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. அதை ஒரு காலமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவும் அனுமதிக்காது. இன்று குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய மக்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்தச் சட்டத்தை அனுமதித்தால் இந்தியா மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் லவ் ஜிகாத் தடை சட்டத்தை கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

இதன்மூலம் இந்துத்துவ பாசிச அரசை நிறுவ மோடியும், அமித்ஷாவும் முயல்கின்றனர். இந்த இக்கட்டான சூழலை தவிர்க்க தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையவேண்டும். இந்தியர்களின் எதிர்காலம் என்பது இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.

ஒருபுறம் பொருளாதார தாக்குதல், மறுபுறம் மதவாத தாக்குதல் என்‌று இரண்டு பக்கங்களிலும் தாக்குதல் நடந்துவருகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

மோடி ஒன்றும் வீழ்த்த முடியாத சக்தியல்ல, என்றார். திமுக வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT