புறவழியாக முதல்வர் ஆனதுதான் நாராயணசாமி செய்த புரட்சி என்று முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் சாடினார்.
பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:
நாராயணசாமியின் பொய்யை மக்கள் நம்ப தயாராக இல்லை. கிரண்பேடியை முன்னிறுத்தி அரசியல் செய்தார்.
நாராயணசாமியின் அரசியல் சாயம் வெளுத்துள்ளது. பொய் சொல்லி வாக்கு பெறும் அரசியலில் அவர் ஈடுபடுகிறார். இனிமேலும் நாராயணசாமியால் புதுச்சேரிக்கு எந்த நன்மையும் செய்யமுடியாது என்பதால்தான் அங்கிருந்து வெளியே வந்தோம்.
தன்னை தேசியத் தலைவராக முன்னிறுத்தவும், கட்சித் தலைமையை திருப்திப்டுத்துவதே அவரது நோக்கம். மக்களுக்கு சேவை செய்யத்தான் பதவிகள். அவ்வாறு சேவை செய்ய முடியாவிட்டால் பதவிகளே தேவையில்லை.
நாராயணசாமி ஏன் ஒரு தொகுதியில் கூட போட்டியிடவில்லை- ஏனெனில் அவருக்கு நேரடி அரசியல் பிடிக்காது. புறவழியாகவே வருவார்.
நாராயணசாமி புரட்சி முதல்வர் என்று கூறிகொள்கிறார். அவர் என்ன புரட்சி செய்தார்.புறவழியாக முதல்வர் ஆனதுதான் அவர் செய்த புரட்சி என்று குறிப்பிட்டார்.
பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் பேசுகையில், "நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்ஜிஆர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது ஒப்பானது புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை. அவர் கூறியதுபோல் பாஜக ஆட்சி வந்தவுடன் தேர்தல் அறிவிப்பை நடைமுறைப்படுத்தினார் புதுச்சேரியில் ஏழைகள் இருக்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டார்.
அதிமுக கிழக்கு மாநிலச் செயலர் அன்பழகன் பேசுகையில், " மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு தேவை. மத்திய அரசுடன் இணக்கமான புதுச்சேரி அரசு அமைந்தால் ஆறு மாதங்களுக்குள் மாநில அந்தஸ்து கிடைக்கும். காங்கிரஸ் ஆட்சி கவிழ பாஜக காரணமல்ல. நாராயணசாமியின் செயல்பாட்டால் அங்கிருந்தோர் வெளியேறியதுதான் காரணம்" என்று தெரிவித்தார்.