புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பார்த்து கையசைத்த பாரத பிரதமர் நரேந்திரமோடி அருகில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி,புதுச்சேரி பாஜக செயலாளர் சுவாநாதன்,முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்,அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்.படம்.எம்.சாம்ராஜ் 
தமிழகம்

தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை: பிரதமர் மோடி

செ.ஞானபிரகாஷ்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அலை வீசுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மோசமான ஆட்சி நடத்தியதால்தான் இம்முறை நாராயணசாமிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் பாஜக, என்ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் கூட்டணியாக போட்டியிடுகிறது. கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிடும் 29 வேட்பாளர்களை (ரங்கசாமி 2தொகுதியில் போட்டி) ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் செய்தார்.

விமான நிலையத்துக்கு வந்த அவர் கார் மூலம் கடலூர் சாலையில் பொதுக்கூட்டம் நடந்த ஏஎப்டி மில் திடலுக்கு வந்தார். அங்கு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

புதுச்சேரிக்கு ஓர் ஈர்ப்பு சக்தி உள்ளது. ஒரு மாதம் முன்பு புதுச்சேரிக்கு வந்தேன். அப்போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றினேன்.

புதுச்சேரி மக்கள் மிகுந்த ஆதரவு அளித்தீர்கள். அந்த கூட்டத்திலேயே வரும் தேர்தலில் மாற்றத்தை தர மக்கள் முடிவெடுத்து விட்டனர் என தெரிந்தது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அலை வீசுகிறது. பல ஆண்டுகளாக மக்கள் விரோத காங்கிரஸ் அரசு செயல்படவில்லை. புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மேலிடம் அனைத்து நடவடிக்கையிலும் தோல்வியடைந்தது. காங்கிரஸ் அரசு அனைத்து மட்டத்திலும் ஊழலில் திளைத்தது. இதனை முன்னாள் முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்றவர்கள் ஓரம் கட்டப்பட்டனர். முன்னாள் முதல்வரின் குடும்பத்தோடு நேரடி தொடர்பில் உள்ளவருக்கு இந்த ஊழலில் தொடர்புண்டு. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களே இதனை வெளிப்படையாக தெரிவித்தனர்.

அரசியலில் எனக்கு நீண்ட அனுபவம் உண்டு. பல தேர்தல்களை பார்த்துள்ளேன். 2021 தேர்தல் வித்தியாசமானது. புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த முதல்வருக்கே சீட் தரவில்லை. தலைவரின் செருப்பை தூக்கியவர், தலைவரிடமே தவறாக மொழி பெயர்ப்பு செய்தவர். மோசமான ஆட்சி நடத்தியதால்தான் இம்முறை நாராயணசாமிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்ற சாதனைகளை இதுவரை அவர் தரவில்லை.

புதுச்சேரிக்கு கடந்த முறை வந்தபோது வர்த்தகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றில் பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என கூறினேன். தன்னிறைவு புதுச்சேரியை உருவாக்குவதே இதன் நோக்கம். தேசிய ஜனநாயக கூட்டணி பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச்செய்யும். லஞ்ச கலாச்சாரத்தை ஒழித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். நீலப்புரட்சியை உருவாக்குவோம். மீன்வளத்துறை 80 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. மீன்வளத்துறை அமைச்சகம் மீனவர்கள் நலனில் அக்கறையோடு செயல் படுகிறது. புதுச்சேரி மீனவர்களின் வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் தேசிய ஜனநாயக கூட்டணி கருத்தில்கொண்டு செயல்படும்.

கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். காரைக்காலில் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. ஜிப்மர் ரத்தவங்கி தொடங்கப்பட்டுள்ளது. விளையாட்டரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது புதுச்சேரி இளைஞர்களின் நலனை மேம்படுத்தும். பல்வேறு சாதனைகள் படைக்க வழி செய்யும். மருத்துவம், தொழில்நுட்ப கல்வியை அவரவர் தாய்மொழியில் கற்க மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது.

புதுச்சேரி என்றால் அரவிந்தர், பாரதி, சித்தானந்தர், தொல்லைகாது சித்தர், மணக்குள விநாயகர் கோவில் நினைவுக்கு வருகிறது. புதுச்சேரியின் ஒவ்வொரு பகுதியிலும் ஆன்மிகம் உள்ளது. புதுச்சேரி ஆன்ம பலத்துக்கு பெருமை சேர்ப்போம். உலகமெங்கும் உள்ள மக்கள் தங்களை மனதளவில் புதுப் பித்துக்கொள்ள புதுச்சேரிக்கு வர வைப்போம்.

காங்கிரஸ் அரசு காரைக்காலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது. இதனால்தான் சுற்றுலா வளர்ச்சி பலவீனமடைந்தது. நாங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நான்குவழிச்சாலை அமைத்து வருகிறோம்.

புதுச்சேரி அழகான கடற்கரை சாலையில் மேரி கட்டிடம் அழகையும், கம்பீரத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது. புதுச்சேரியின் சாலையோர உணவு கடைகள் பிரசித்தி பெற்றது. இந்த கடைகளை மேம்படுத்தும் திட்டமும் எங்களிடம் உள்ளது.

புதுச்சேரி மீன்வளத்துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் செயல்படுத்தப்படும். 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் 8 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்கட்டமைப்பு உருவாக்க ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மீன்வளம் பெருக்க ரூ.220 கோடி திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் 30 எக்டேரில் மீன் வளர்க்கவும், மீன் விற்பனை மையம், குளிர்சாதன கிடங்கு, குளிர்சாதன வசதியுடன் படகுகள், துறைமுகங்கள், இறங்கு தளத்துடன் கூடிய மீன்பிடி துறைமுகம் 2 அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் உறுதி அளிக்கிறோம். உங்கள் தேவைதான் எங்கள் வாக்குறுதி. எங்கள் சாதனைகள் இதற்கு சான்று கூறும். அனைவரும் இணைவோம், அனைவரும் நம்புவோம், அனைவரும் உயர்வோம்" என்று பிரச்சாரம் செய்தார்.

SCROLL FOR NEXT