ஒட்டுமொத்த தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என, மக்களவை திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் க.ராமச்சந்திரனை ஆதரித்து எம்.பி. தயாநிதி மாறன் இன்று (மார்ச் 30) குன்னூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
குன்னூர் வி.பி.தெருவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எம்.பி. தயாநிதி மாறன் பேசியதாவது:
"தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன், ஸ்டாலின் மகனாக இருந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார். ஒட்டுமொத்த தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக சொன்னது ஸ்டாலினோ, நானோ இல்லை. துணை முதல்வர் ஓபிஎஸ். ஆனால், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஒருமுறைக் கூட ஆஜராகவில்லை.
இந்தியாவில் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என கூறி, பிரதமர் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். ரூ.500, ரூ.1,000 நோட்டை தடை செய்து மக்களை திண்டாட செய்தார் பிரதமர் மோடி.
அதே போல, கரோனா காலத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்தார். அடுத்ததாக,தொலைக்காட்சி முன் தோன்றி அனைவரும் கைத்தட்ட சொல்லி கரோனாவை பரப்பியதே பிரதமரின் சாதனை.
மக்களின் காதில் பூ சுற்றுவது போல கரோனாவை பற்றி பேசி, இன்று வரை கரோனா நம்மை விட்டு செல்லவில்லை. டெல்லியில் ஒரு கோமாளி, தமிழகத்தில் ஒரு கோமாளி ஆட்சி புரிகின்றனர்.
மக்கள் சிரமத்தை போக்க கரோனா காலத்தில் நிதி உதவி வழங்க ஸ்டாலின் அறிவுறுத்தினார். ஆனால், அப்போது நிதியில்லை என கூறி, பொங்கல் பண்டிகையின் போது ரூ.2,500 கொடுக்கப்பட்டது. இந்த தொகை திமுக கொடுத்த அழுத்தத்தினாலேயே கொடுக்கப்பட்டது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் உரிய காலத்தில் அனைவருக்கும் ரூ.4000 வழங்கப்படும். இத்தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல, நம் எதிர்கால தலைமுறைக்கான பாதுகாப்பு தேர்தல். தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வந்து நமது தமிழக மாணவர்களை நசுக்கியது மத்திய மற்றும் மாநில அரசுகள்.
அதிமுக அரசு தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்தால் தான் இந்த நிலைமைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறியவர்கள் வாயை திறக்காமல் உள்ள நிலையில் திமுக ஆட்சி அமைத்தவுடன் யார், யார் காரணம் என தெரியவரும்".
இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.
கூட்டத்தில் வேட்பாளர் க.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.