தமிழகம்

கரோனா தடுப்பூசியால் உயிரிழந்தவர்கள் யாருமில்லை: ஆளுநர் தமிழிசை பேச்சு  

அ.முன்னடியான்

கரோனாவால் உயிரிழந்தவர்கள் இருக்கிறார்கள், ஆனால், தடுப்பூசியால் உயிரிழந்தவர்கள் யாருமில்லை என்பதை நாம் உணர வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில், மதகடிப்பட்டு கலித்தீர்த்தாள் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (மார்ச் 30) நடைபெற்றது.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முகாமைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

‘‘தடுப்பூசி கவச ஊசியாக உள்ளது. முன்களப் பணியாளர்களுக்கு, அவர்களின் சேவைக்கான பரிசு ஊசி. கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள யாரும் தயங்க வேண்டாம். 6 கோடி பேருக்கு ஊசி போட்டதில் 0.000432 சதவீதம்தான் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கரோனாவால் உயிரிழந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசியால் உயிரிழந்தவர்கள் யாருமில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

சென்ற ஆண்டு இதே மாதம் கரோனாவுக்காகப் பல்லாயிரக்கணக்கான பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொண்டிருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு அதே மாதம் பல்லாயிரக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அளவிற்கு இந்தியா முன்னேறியிருக்கிறது.

இன்று 51 நாடுகள் நம் தடுப்பூசியைப் பெற்றிருக்கின்றன. 125 நாடுகள் காத்திருக்கின்றன. அன்று நம்மை அடிமைப்படுத்திய நாடு, இன்று நம் தடுப்பூசியைப் பெற்றதற்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறது.

தடுப்பூசியும் போட வேண்டும், முகக் கவசத்தையும் அணிய வேண்டும். தடுப்பூசி கரோனாவைத் தடுக்கிறது. ஊசி போட்டபின்பு, ஒரு வேளை கரோனா வந்தாலும், அது தீவிரமாக இருக்காது என்பது உண்மை.’’

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

இதில் ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏபி மகேஸ்வரி, சுகாதாரத்துறைச் செயலர் அருண், இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெற்றனர்.

SCROLL FOR NEXT