தமிழகம்

தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கேட்கின்ற பொழுதெல்லாம் மோடி கொடுக்கின்றார் : முதல்வர் பழனிசாமி பேச்சு

செய்திப்பிரிவு

நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம் தமிழகம். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மக்களின் நீர்த்தேவையை நிறைவேற்றும். அதை மத்திய அரசு நிறைவேற்றித் தரும். பிரதமர் அதை நிறைவேற்றித் தருவார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

தாராபுரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“இந்தத் தேர்தலில் நமது கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு பதிவு செய்கிறேன். பிரதமர் மோடி உலக அரங்கில் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்கிற நாட்டு மக்களின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்திய நாடு உலக அரங்கில் பெருமை அடைகிறது என்று சொன்னால் அவரது உழைப்பால் அந்தப் பெருமையை அடைந்துள்ளது.

இன்றைக்குத் தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கேட்கின்ற பொழுதெல்லாம் கொடுக்கின்ற அரசு மத்திய அரசு. சுமார் 5200 கி.மீ. நீளமுள்ள சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை மூலமாக அமைக்க ரூ.1 லட்சத்து 5000 கோடி வழங்கி திட்டத்தை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம் தமிழகம். கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டம் மக்களின் நீர்த்தேவையை நிறைவேற்றும். அதை மத்திய அரசு நிறைவேற்றித் தரும். பிரதமர் அதை நிறைவேற்றித் தருவார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.

இதெல்லாம் மிகப்பெரிய திட்டம். இதை நிறைவேற்ற வேண்டுமானால் மத்திய அரசு மனது வைக்க வேண்டும். அதற்கு மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள மாநில அரசு இருக்க வேண்டும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

SCROLL FOR NEXT