புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் உட்பட 8 ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதிகளில் ஏராளமானவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக விவசாய நிலங்களை வீட்டு மனையாக விற்பனை செய்து வருகின்றனர். இதில் அரசியல்வாதிகளும் அடங்குவர். ரியல் எஸ்டேட்டில் அதிகளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக, சென்னை வருமானவரித்துறை அலுவலகத்திற்கு புகார் சென்றது.
இதன் பேரில் இன்று புதுச்சேரி வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதுபற்றி வருமானவரித்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "புதுச்சேரியில் 8 ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடக்கிறது" என்று உறுதி செய்தனர்.
இதன் காரணமாக தொழிலதிபர்களின் வீடுகளுக்குள் யாரையும் அனுமதிக்காமல் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 தொழிலதிபர்களின் ஒருவர் புவனா என்ற புவனேஸ்வரன். இவர் என் ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கடந்த முறை நடந்த தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனா என்ற புவனேஸ்வரன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. இந்நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள புவனேஸ்வரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் வீட்டில் பல மணி நேரம் தொடர்ந்து நடந்தசோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளதாகவும் அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.