காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட தொல்.திருமாவளவன் 
தமிழகம்

கூட்டணியில் இருப்பவர்களைக்கூட குழிதோண்டிப் புதைக்கும் பாஜக: திருமாவளவன் விமர்சனம்

வீ.தமிழன்பன்

கூட்டணியில் இருப்பவர்களைக்கூட குழிதோண்டிப் புதைக்கும் அநாகரிக அரசியலின் வடிவம் பாஜக என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

திருநள்ளாறு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனுக்கு ஆதரவாகத் திருநள்ளாற்றிலும், காரைக்கால் வடக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மாநிலக் காங்கிரஸ் தலைவருமான ஏ.வி.சுப்ரமணியணுக்கு ஆதரவாக காரைக்கால் புதிய பேருந்து நிலையம், தலத்தெரு ஆகிய பகுதிகளிலும், நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.மாரிமுத்துக்கு ஆதரவாக கோட்டுச்சேரியிலும் இன்று (மார்ச் 30) திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

”நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகள், புதுச்சேரியில் கிரண்பேடி என்கிற துணைநிலை ஆளுநரை வைத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசை முடக்கியது. இதனைப் புதுச்சேரி மக்கள் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

நாட்டில் பாஜக அல்லாத மாற்றுக் கட்சிகளின் அரசு அமைந்திருப்பதைச் செயல்படவிடாமல் தடுக்கும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபடுகிற அநாகரிக அரசியலில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதனையும் பொதுமக்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும், மத்தியில் உள்ள நாங்கள்தான் ஆள்வோம், எங்கள் கட்டுப்பாட்டில்தான் வைத்திருப்போம் என்கிற ஆணவமான, யதேச்சதிகாரப் போக்கை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது.

என்.ஆர்.காங்கிரஸுடன் இணைந்து காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்தது. அதிமுகவும் இதற்குத் துணைபோனது. என்.ஆர்.காங்கிரஸும், அதிமுகவும், பாஜகவைத் தோளில் சுமந்துகொண்டு வருகின்றன. கூட்டணியில் இருக்கும்போதே என்.ஆர்.கட்சியைச் சேர்ந்த 3 பேரை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது. கூட்டணியில் இருப்பவர்களைக்கூட குழிதோண்டிப் புதைக்கும் அநாகரிக அரசியலின் வடிவம் பாஜக.

புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம், கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, வாக்குகளையும், வேறு எந்தக் கட்சியில் வெற்றி பெற்றவர்களையும் விலைக்கு வாங்கிவிடலாம் எனக் கங்கணம் கட்டிச் செயல்படும் பாஜகவைப் புதுவையிலிருந்து விரட்டும் பொறுப்பு புதுச்சேரி பொதுமக்களுக்கு இருக்கிறது.

இங்கு பாஜக காலூன்றினால் புதுச்சேரியை யாராலும் காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் அரசு புதுவையில் சமூக நல்லிணக்க ஆட்சியைத் தந்தது. புதுச்சேரியில் பல நாட்டுக் குடியுரிமையுள்ளோர் வாழ்கின்றனர். கலாச்சாரப் பெருமைமிக்க, பன்மைத்துவம் மேலோங்கியுள்ள புதுச்சேரியை, மதவாத பூமியாக மாற்ற பாஜக முயல்கிறது. அதற்கு இடமளிக்காமல் பன்மைத்துவத்தைக் காக்க காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டியது அவசியம்.”

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

SCROLL FOR NEXT