தூத்துக்குடி மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளைப் பெறும் பணி நேற்று தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கரோனா பெருந்தொற்று காலத்தில் நடைபெறுவதால் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த முறை வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வரத் தேவையில்லை. அவர்கள் விருப்பத்தின் பேரில் தாபல் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு போட விருப்பம் உள்ளதா இல்லையா என்பதை அறிய அவர்களிடம் இருந்து 12டி படிவத்தை நிரப்பி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பெறப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45 ஆயிரம் பேர் தபால் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருந்த போதிலும், 3,503 பேர் மட்டும் தபால் வாக்கு போட விருப்பம் தெரிவித்து படிவம் நிரப்பி கொடுத்தனர்.
இவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக மாவட்டம் முழுவதும் 39 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் துணை வட்டாட்சியர் நிலையிலான மண்டல அலுவலர், மத்திய அரசு அலுவலரான நுண் பார்வையாளர், வாக்குச்சாவடி நிலை அலுவலர், காவல் துறையை சேர்ந்த ஒருவர், வீடியோ கிராபர் ஒருவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் அந்தந்த தொகுதிக்கான வாக்குச்சீட்டுகளை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சென்று வாக்களர்களின் விபரங்களை சரி பார்த்த பின்பு அவர்களிடம் வாக்குச் சீட்டு கொடுக்கப்பட்டு, ரகசியமான இடத்தில் வைத்து அவர்கள் தங்கள் வாக்கை செலுத்தினர்.
பின்னர் வாக்குச்சீட்டை ஒரு உறையில் போட்டு ஒட்டி அதனை அதிகாரிகள் குழுவினரிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் குழுவினர் மற்றொரு உறையில் அந்த தபால் ஓட்டை போட்டு சீல் வைத்து, கையோடு கொண்டு சென்ற தபால் ஓட்டு பெட்டியில் போட்டனர். இந்த பணிகளை வேட்பாளர்களின் முகவர்கள் குறிப்பிட்ட தொலைவில் இருந்து முழுமையாக கண்காணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு 6 தொகுதிகளிலும் சிறப்புக் குழுவினர் வீடாக சென்று தபால் வாக்குகளை பெற்றனர். இந்த பணி வரும் 31-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும். இந்த தபால் ஓட்டுகள் அடங்கிய ஓட்டுப் பெட்டிகளை வரும் மே 2 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை, அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமிரா கண்காணிப்பில் வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.