தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் ஶ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜை ஆதரித்து கனிமொழி எம்பி பிரசாரம் செய்தார். 
தமிழகம்

அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு இல்லை: திருச்செந்தூர், ஶ்ரீவைகுண்டத்தில் கனிமொழி எம்.பி பிரச்சாரம்

ரெ.ஜாய்சன்

தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றால் மக்கள் நலப்பணிகள் தடையின்றி நடைபெறும் என, அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து உடன்குடி பஜாரிலும், ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜை ஆதரித்து ஆழ்வார்திருநகரி மற்றும் ஏரலிலும் திமுக மகளிரணி செயலாளரும், தென்மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி எம்பி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் எதிர்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் மக்கள் நலப் பணிகளுக்கு ஆளுங்கட்சி தடையை ஏற்படுத்தியது. அதுபோல பிரதமர் மோடி கரோனாவை காரணம் காட்டி மக்கள் நலப் பணிகளுக்கான நிதிகளை நிறுத்தி வைத்தார்.

மக்கள் நல பணிகளை செய்ய விடாமல் தடுத்த இரண்டு பேரும் தற்போது கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க வந்துள்ளனர்.

திருச்செந்தூர், ஶ்ரீவைகுண்டம் தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறும்போது திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்பார். அப்போது நானும் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் அனைவரும் இணைந்து மக்கள் நல பணிகளை தங்குதடையின்றி செய்வோம்.

தற்போதைய ஆட்சியில் வேலை வாய்ப்புகள் கிடையாது. விவசாயிகளுக்கு பாதுகாப்பு கிடையாது. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு புதிய சட்டங்கள் மூலம் பறித்துக் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி கட்சியினர் எதிர்த்த வேளாண் சட்டங்களையும், குடியுரிமை சட்டங்களையும் முதல்வர் பழனிச்சாமி தன்னையும், தனது அமைச்சர்களையும் காப்பாற்றுவதற்காக ஆதரித்தார்.

தற்போது தேர்தலுக்காக அந்த சட்டங்களை ரத்து செய்ய பாடுபடுவோம் என முதல்வர் பழனிசாமி கூறுகிறார். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களை பிரிக்கும் பிரிவினை சக்திகளின் வெறுப்பு அரசியல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்தது. தற்போது பழனிச்சாமி ஆட்சியில் 14-வது இடத்தில் உள்ளது. அதிமுக தாங்கள் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. சட்டப்பேரவை தேர்தல் மூலம் தமிழகம் மீட்கப்பட வேண்டும். அடுத்து வரும் தேர்தல் மூலம் இந்தியா மீட்கப்பட வேண்டும் என்றார் கனிமொழி.

SCROLL FOR NEXT