கோடை சீசனை முன்னிட்டு உதகை - மேட்டுப்பாளையம் இடையே ஏப்ரல் 3-ம் தேதி முதல் வாரயிறுதி நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை பார்த்து மகிழ்கின்றனர்.
சுற்றுலா வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதகளில் சீசனை அனுபவிக்க நீலகிரி வரும் பெரும்பாலானோர் யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் மகிழ்ச்சியாக பயணிக்கின்றனர். இதனால் சீசன் சமயங்களில் மட்டும் மலை ரயிலில் பயணிக்க கூட்டம் அலைமோதும். நாள்தோறும் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிப்பார்கள்.
குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மூன்று பெட்டிகளுடன் இயக்கப்படும் ரயிலில் 150 பேர் பயணம் செய்யலாம். இதில், 16 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு காரணமாக டிக்கெட் கிடைக்காத நிலையே ஏற்பட்டு வருகிறது.
கடந்தாண்டு கரோனா பரவல் காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 31-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா காலக்கட்டத்தினால் மலை ரயில் முழுவதும் முன்பதிவு முறையிலேயே இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது கோடை சீசன் தொடங்கவுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக ஏப்ரல் மாதம் முதல் வாரயிறுதி நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, ‘உதகை-மேட்டுப்பாளையம் இடையே ஏப்ரல் மாதம் 3-ம் தேதி முதல் ஜூலை மாதம் 7-ம் தேதி வரை வாரயிறுதி நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
ஏப்ரல் 3-ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் மலை ரயில் மதியம் 2.25 மணிக்கு உதகை வந்தடையும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு உதகையிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில், மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் 72 முதல் வகுப்பு இருக்கைகள் மற்றும் 100 இரண்டாம் வகுப்பு இருக்கைளுடன், முழுவதும் முன்பதிவுடன் இயக்கப்படும்.
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு முதல் வகுப்பு ரூ.1450, இரண்டாம் வகுப்பு ரூ.1050ம், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு ரூ.1100 மற்றும் இரண்டாம் வகுப்பு ரூ.800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.