திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி அதிமுக வேட்பாளரின் பொக்லைன் ஓட்டுநரின் வீட்டு வைக்கோல்போரில் இருந்து ரூ.1 கோடி ரொக்கத்தை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆர்.சந்திரசேகர். இந்தத் தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்ற இவர், தற்போது இதே தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், சந்திரசேகரிடம் நீண்டகாலமாக பொக்லைன் ஓட்டுநராக பணியாற்றும் வலசுபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி மற்றும் ஒப்பந்ததாரர்களான வலசுபட்டி தங்கபாண்டியன், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் என்ற ஆனந்த் ஆகியோர் வீடுகளில் நேற்று முன்தினம் இரவு வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், அழகர்சாமி வீட்டின் பின்னால் உள்ள வைக்கோல்போரில் இருந்து 500 ரூபாய் கட்டுகளாக இருந்த ரூ.1 கோடியை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து இந்தச் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
வருமான வரித் துறையினரின் சோதனை குறித்து தகவலறிந்த தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
மணப்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏவின் பொக்லைன்ஓட்டுநரின் வீட்டு வைக்கோல்போரில் இருந்து தற்போது ரூ.1 கோடியை வருமான வரித் துறையினர் கைப் பற்றிய தகவல் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.