வேளச்சேரியில் மின் கம்பி அறுந்துவிழுந்து தம்பதி பலியான சம்பவம் தொடர்பாக, வேளச்சேரி பகுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் உட்பட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முழுவதும் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இந்நிலையில், நேற்று மாலை வேளச்சேரி, அஷ்டலட்சுமி தெருவைச் சேர்ந்த கருணா, மனைவி சுதா மற்றும் குழந்தைகள் ஆதித்ய ஸ்ரீ மற்றும் திவ்யஸ்ரீ யுடன், அஷ்டலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ள கடைக்கு வாகனத்தில் வந்தார். கணவன், மனைவி இருவரும் கடைக்குள் பொருட்களை வாங்கி திரும்பும் போது எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதை யடுத்து, அப்பகுதியில் மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மின் வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவே சம்பவத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், வேளச்சேரி பகுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சக்திவேல், உதவி பொறியாளர் ரமேஷ், போர்மேன்கள் பாலையா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.