தமிழகம்

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் முதல்வர் பழனிசாமி தீவிர பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சென்னையில் முதல்வர் பழனிசாமி 2-வது நாளாக நேற்று தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார்.

அதிமுக வேட்பாளர்கள் மயிலாப்பூர் ஆர்.நடராஜ், அண்ணா நகர் எஸ்.கோகுலஇந்திரா, தி.நகர் பி.சத்தியா என்கிற சத்தியநாராயணன், சைதாப்பேட்டை சைதை துரைசாமி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

நாட்டிலேயே அமைதி தவழும் மாநிலமாக விளங்குவது தமிழகம். அதுபோல, பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மாநகரம் சென்னை. சென்னையில் குற்றங்களை குறைக்க 2.50 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரச்சாரக் கூட்டங்களில் திமுகவினர் வேண்டுமென்றே அதிமுக அரசை பற்றி பொய்யான, அவதூறு பிரச்சாரங்களை செய்கின்றனர். அதிமுக அரசில் ஒன்றுமே நடக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். தி.நகருக்கு வந்து பார்க்கட்டும். சிங்கப்பூர் மாதிரி அருமையாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் பாண்டிபஜார் பகுதி அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை ரூ.20 கோடியில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

அடையாறு, கூவம் ஆற்றை சீரமைத்துள்ளோம். மழைக்காலங்களில் வடிகால் வசதி செய்து எங்கும் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றப்பட்டுள்ளது. அண்ணாநகர் பகுதியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்டப்பேரவையில் எம்ஜிஆரை பேசவிடாமல் திமுகவினர் புத்தகத்தை வீசினார்கள். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்தும், தலைமுடியைப் பிடித்தும் இழுத்தார்கள். அந்த காட்சி இன்னமும் என் மனதில் இருக்கிறது. சட்டம் இயற்றும் மாமன்றம் புனிதமான இடம். மக்களுக்கான சட்டங்கள், திட்டங்களை நிறைவேற்றும் சட்டப் பேரவையிலேயே அவ்வளவு அராஜகத்தை செய்தார்கள்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “கரோனா மிகப்பெரிய தொற்று நோயாகும். உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர்.

இதனைத் தடுப்பதற்காக அரசு சார்பில் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே, பொது மக்கள் அரசு மருத்துவமனையை அணுகி கட்டாயம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான், கரோனாவை கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

கூட்டம் இல்லாததால் முதல்வர் அதிருப்தி

மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அந்தளவுக்கு செல்வாக்கு மிகுந்த இத்தொகுதியில், முதல்வர் பிரச்சாரம் செய்ய வரும்போது பெரும் எழுச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லாததால் முதல்வர் அதிருப்தியடைந்ததைக் கவனித்த நிர்வாகிகள், கட்சியினரை கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT