கரோனா தொற்றிலிருந்து மீண்டு பள்ளிக்கரணை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த வேட்பாளர் அரவிந்த் ரமேஷுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
தமிழகம்

கரோனா தொற்றுக்கு சிகிச்சை முடிந்து சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் பிரச்சாரம்: பொக்லைன் மூலம் மலர் தூவி வரவேற்பு

செய்திப்பிரிவு

சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. ஆனால் தொண்டர்கள் வேட்பாளர் இன்றி தீவிரமாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று அரவிந்த் ரமேஷ் வீடு திரும்பினார். உடனடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பள்ளிக்கரணை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது மக்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் மலர் தூவியும், கிரேன் மூலம் 15 அடி உயர மாலை அணிவித்தும், செயற்கை யானை மூலம் மாலை அணிவித்தும், வீரவாள் வழங்கியும், புலியாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற கலை நிகழ்ச்சிகளுடனும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து மாட்டு வண்டியில் ஏறிய அரவிந்த் ரமேஷ் தானே வண்டியை ஓட்டியபடி வாக்கு சேகரித்தார். வேட்பாளர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பிரச்சாரம் செய்ய குறைந்த நாட்களே உள்ளதால் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேட்பாளர் முடிவு செய்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றன.

மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளதால், காலை மற்றும் மாலை வேளையில் மட்டும் பிரச்சாரம் செய்வது என்றும் மற்ற நேரங்களில் தொலைபேசி, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT