தமிழகம்

`நாங்கள்..! எங்கள் கட்சி..! எங்கள் வேட்பாளர்கள்..!’ - புதுவையில் கூட்டணியைத் தவிர்க்கும் கட்சிகள்

செ.ஞானபிரகாஷ்

“நாங்கள்..! எங்கள் கட்சி..! எங்கள் வேட்பாளர்கள்..!” என்ற அளவிலேயே புதுச்சேரியில் முக்கிய கட்சிகள் கூட்டணியைத் தவிர்த்து களமிறங்கிள்ளனர். வெளியூரில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் கூட கூட்டணிக் கட்சிக்காக பரப்புரையில் ஈடுபடாத புதிய போக்கு புதுச்சேரியில் உருவாகியுள்ளது.

புதுச்சேரியில் மதசார்பற்ற அணியில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இக்கூட்டணியில் போட்டியிட தொகுதி ஒதுக்காததால் முத்தியால்பேட்டையில் தனித்து களம் காண்கிறது.

எதிர் தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாமகவுக்கு தொகுதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்த பின்னரும் பாஜக நடத்திய பேச்சுவார்த்தையால் அனைவரும் மனுவை திரும்ப பெற்று விட்டனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து இதுவரைஎதிர்பார்க்கப்பட்ட தலைவர்கள் யாரும் புதுச்சேரியில் பிரச்சாரத்துக்கு வரவில்லை. மாலையில் மட்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே தொகுதி தோறும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுகவில் எம்.பி சிவா மட்டுமே வெளியூரில் இருந்து அவர்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். வேறு முக்கியத் தலைவர்கள் யாரும் இதுவரை புதுச்சேரிக்கு வரவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலர் முத்தரசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் வந்து, அவரவர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்து திரும்பினர்.

வழக்கமாக கூட்டணிக் கட்சிமுக்கியத் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி தொடங்கி, அணியில்உள்ள இதரக்கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்வது வழக்கம். இம்முறை அது நடக்கவில்லை. அதே நேரத்தில் இக்கூட்டணியில் உள்ள உள்ளூர் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஒன்றாக காணப்படுகின்றனர். பிரச்சார வாகனத்தில் பேசுகின் றனர்.ஆனால் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இந்நிலை மாறுகிறது. இக்கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை இதர கூட்டணியினரும், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரத்துக்கு அழைக்கின்றனர். ஆனால், ரங்கசாமி தனது கட்சி வேட்பாளர்கள் தொகுதிகளில் கவனம் காட்டி வருகிறார்.

அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட்டாலும் அவர்களும் தனித்தே இயங்குகின்றனர். அவர்களுக்காக தமிழகத்தில் இருந்து தலைவர்கள் யாரும் இதுவரை பிரச்சாரத்துக்கு வரவில்லை. மேலும் என்.ஆர்.காங்கிரஸும், அதிமுகவும் பாஜக தரப்பை பிரச்சாரத்துக்கு இணைத்து கொள்வதில்லை. அதே நேரத்தில் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய மத்திய அமைச்சர்கள் ஏராளமானோர் பிரச்சாரத்துக்கு வந்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், நிதின் கட்கரி தொடங்கி பலரும் புதுச்சேரிக்கு வந்து பிரச்சாரம் செய்தனர். பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றனர். இவர்கள் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தினர்.

இதுபற்றி திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா கூறுகையில், "மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நேர்மையான கூட்டணி. எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக தேர்தல் களத்தில் பணியாற்றி வருகின்றோம். ஆனால் எதிர் கூட்டணி நேர்மையற்ற கூட்டணி. அதனால்தான் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி பிரச்சாரம் செய்வதில்லை. எதிரணியில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் ஒன்றாக பிரச்சாரத்திற்கு வர முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக மேலிட தரப்பில் இதுபற்றி கேட்டதற்கு, "புதுச்சேரியில் தேசியஜனநாயகக்கூட்டணி பிரச்சாரத்தில் முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு பதில் தரும் வகையில் பிரதமர் மோடிஇன்று பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இடம் பெறவுள் ளனர்"என்று குறிப்பிட்டனர்.

காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வரவில்லை.

SCROLL FOR NEXT