கோப்புப்படம் 
தமிழகம்

தென் தமிழக மக்கள் பிரதிநிதிகள் அலட்சியத்தால் தொடரும் பின்னடைவு: சிஐஎஸ்எஃப் வீரர்கள் பற்றாக்குறையால் மதுரையில் 2 சிங்கப்பூர் விமானங்கள் ரத்து

செய்திப்பிரிவு

மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயக்குவதற்கு எம்பிக்கள் நடவடிக்கை எடுக்காத தால் மதுரை-சிங்கப்பூர் இடையே இயக்கப்பட்ட 2 விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து மதுரை வழியாக சிங்கப்பூருக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்துக்கு 3 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. டெல்லி, மதுரை, சிங்கப்பூரை இணைத்து இயக்கப்பட்டதால் தென் தமிழகம் மட்டுமில்லாது வடமாநில பயணிகளும் பயனடைந்தனர்.

சிங்கப்பூர் விமானங்கள் வாரத்தில் 3 நாள் மதுரை வழியாக இயக்கப்பட்டன. அப்போதே, மதுரை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பற்றாக்குறை காணப்பட்டது. அவர்கள் இரவு 10 மணி வரை மட்டுமே பணியில் இருந்தனர். சிங்கப்பூர் இரவு நேர விமானம் இரவு 11.15 மணிக்கு மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டும். ஆனால் மதுரை விமானநிலையம் 24 மணி நேரம் செயல்படாமல் 2 ஷிப்ட் முறையில் இரவு 10 மணி வரையே செயல்பட்டது.

சிங்கப்பூர் செல்லும் இரவு நேர விமானங்களை இயக்குவதற்காகவே சிஐஎஸ்எஃப் வீரர்களின் 2-வது ‘சிப்ட்’டை இரவு 11.30 மணி வரை நீட்டித்தனர். அப்படி பெரும் சிரமப்பட்டு சிங்கப்பூர் விமானங்கள் மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் கோடைகால விமானங்கள் இயக்கும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டு வந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு சிஐஎஸ்எஃப் வீரர்கள் பற்றாக்குறை என்ற காரணம் சொல்லப்படுகிறது.

சிங்கப்பூர் விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் நிறுவனம் இயக்கி வந்தது. இந்த நிறுவனம் ஒரு மாதத்துக்கு முன்பே, வழக்கம்போல் இந்த கோடைகாலத்திலும் தங்களுடைய சிங்கப்பூர் விமானங்களை மதுரை வழியாக இயக்குவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் மதுரை விமான நிலையம் தரப்பில் 2-வது ஷிப்ட் இரவு 10 மணியோடு முடிந்துவிடும், போதிய சிஐஎஸ்எஃப் வீரர்கள் இல்லாததால் 2-வது ஷிப்ட்டை 10 மணிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்று தெரிவித்து விட்டனர்.

இதனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், மதுரை வழியாக இயக்கி வந்த 2 விமானங்களை தற்போது ரத்து செய்துள்ளது. அதனால் வாரத்துக்கு 3 நாட்கள் மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்த சிங்கப்பூர் விமானங்கள், தற்போது ஒரே ஒரு நாள் திங்கட்கிழமை மட்டும் இயக்கப்படுகிறது.

தென் தமிழக மக்கள் பிரதிநிதிகள் மதுரை விமான நிலையத்தை மேம்படுத்தவும், அதனை 24 மணி நேரமும் செயல்படும் விமான நிலையமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்காததால்தான் மதுரை விமான நிலையம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்த தேர்தலிலும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசும் தென் தமிழகத்தில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஒருவர்கூட மதுரை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான வாக்குறுதிகளை முன்வைக்கவில்லை. அரசியல் கட்சிகளும், தங்கள் தேர்தல் அறிக்கையில் மதுரை விமான நிலையத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இது தென் மாவட்ட மக்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

SCROLL FOR NEXT