தமிழகம்

உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை: புதிய நுழைவாயில் உள்ளிட்ட ஆயத்தப் பணிகள் தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் வரும் 16-ம் தேதி முதல் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) ஈடுபட இருப்பதால், புதிய நுழைவாயில் அமைப்பது உள்ளிட்ட ஆயத்தப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு கடந்த 30-ம் தேதி உத்தரவிட்டது. அப்போதிருந்தே மத்திய பாதுகாப்புப் படைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பது தொடர்பாக நீதிபதி சுதாகர் தலைமையிலான பாதுகாப்புக் குழு தினசரி கூடி, முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறது.

வேலி அமைத்து 39 உயர் நீதிமன்றங்களைத் தனியாகப் பிரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. உயர் நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 9 நுழைவாயில்கள் உள்ளன. இப்போது 10-வதாக புதிய நுழைவாயில் அமைக்கப்படுகிறது. இப்புதிய நுழைவாயில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு கட்டிடத்துக்கும் உயர் நீதிமன்றத்தின் 7-வது நுழை வாயிலுக்கும் இடையே அமைக் கப்படுகிறது.

அடையாள அட்டை

உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் குழு முடிவின்படி, வரும் 16-ம் தேதி முதல் உயர் நீதிமன்ற வளாகம் காலை 8.30 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். அதன்பிறகோ, காலையில் 8.30 மணிக்கு முன்னரோ யாருக்கும் அனுமதி இல்லை. உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வர வழக் காடிகளுக்கு அனுமதி கிடை யாது. வழக்கறிஞர்கள், நீதி மன்றப் பணியாளர்கள் உள்ளிட் டோருக்கு தனித்தனி வண்ணத் தில் அடையாள அட்டை வழங் கப்படுகிறது. கீழமை நீதிமன்றத் துக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் பணிகள் நிமித்தமாக சென்று வருவோருக்கு வேறொரு வண்ணத்தில் அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

உயர் நீதிமன்ற வளாகத்தில் மத்திய பாதுகாப்புப் படையைக் கொண்டு எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன என்பது பற்றியும் யார், யார் எந்த வழியில் வந்து எந்த வழியில் வெளியே செல்ல வேண் டும், கார்கள், இருசக்கர வாகனங் கள் நிறுத்தும் இடம் குறித்தும் வரும் 14-ம் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும்.

சென்னை வந்தது

உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியை மேற்கொள்வதற்காக மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்) நேற்று சென்னை வந்தடைந்தது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வரும் 16-ம் தேதி முதல் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். இதற்காக, இப்படையைச் சேர்ந்த 150 பேர் வடமாநிலங்களில் இருந்து நேற்று ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர். இவர்கள் கொண்டித்தோப்பில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT