பணத்தை நம்பி ஓட்டுப் போட்டால் தமிழ்நாடே சுடுகாடாக மாறிவிடும். பணத்திற்காக வாக்களிக்கும் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுங்கள். ஆட்சி, அதிகாரத்தை நல்லவர்கள் கையில் கொடுங்கள் என்று போடியில் நடந்த பிரச்சாரத்தில் டிடிவி.தினகரன் பேசினார்.
அமமுக.பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் போடி தொகுதி வேட்பாளர் முத்துச்சாமியை ஆதரித்து பேசியதாவது: என்மீது பூ தூவினால் சட்டைக்குள் புழு சென்றுவிடும். ஓ.பன்னீர்செல்வம், தங்கதமிழ்ச்செல்வன் மாதிரி. அதற்காகத்தான் வேண்டாம் என்கிறேன்.
ஜெயலிதா பெயரிலோ அவர் படத்தைக் கொடியில் வைத்தோ கட்சி ஆரம்பிப்போம் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. இதற்குக்காரணம் ஓ.பன்னீர்செல்வம்.
முதல்வராக சசிகலா இருக்கட்டும் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு 2நாள் கழித்து தர்மயுத்தம் என்று தியானம் செய்தார். அவருக்கு பல நாக்குகள் உள்ளன. அவை மாறி மாறிப் பேசும்.தேர்தல் வந்ததும் சசிகலா மீது அவருக்கு ஞானோதயம் வந்துவிட்டது. அவர்மீது மரியாதை உண்டு. மதிப்பு உண்டு என்று கூறத் தொடங்கி உள்ளார்.
மாலை, ஆரத்தி, திருஷ்டிபூசணி எதுவும் எனக்கு வேண்டாம். கரோனா குறித்து பயமாக இருக்கிறது. ஆனால் நான் கரோனாவைத் தவிர யாருக்கும் பயப்படமாட்டேன்.
நான் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்மன் என்றுதான் அழைப்பேன். அப்போது அவர் நகராட்சித் தலைவராகத்தான் இருந்தார். அவரும் சேர்மன் என்றே அழையுங்கள் என்று விரும்பி கேட்டுக் கொள்வார். அவர் மீது இப்போதும் எனக்கு மரியாதை உண்டு. இன்னாரு நண்பர் தகரதமிழ்ச்செல்வன். இவர் எதற்கு அமமுகவிற்கு வந்தார். எதற்காக திமுகவிற்கு சென்றார் என்று அவருக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை.
எம்ஜிஆர்.ஜெயலலிதா ஆகியோர் யாரை தமிழினத் துரோகிகள் என்ற அழைத்தார்களோ அவர்களிடம் சென்று தற்போது வேட்பாளராக இருக்கிறார். பரம்பரையாக நாங்கள் அதிமுக.என்று சொல்லிக் கொள்கிறார். தங்கதமிழ்ச்செல்வனை அவரது அப்பா ஆத்மா கூட மன்னிக்காது.
வேட்பாளர் முத்துச்சாமியும் அவர்களுடைய சமகாலத்தவர்தான். ஆனால் இவர் எப்போதும் நல்லகுணத்துடன் இருக்கிறார்.
போடி தொகுதி மக்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும். அம்மா கட்சியை அமமுக. கண்டிப்பாக மீட்டெடுக்கும். எம்ஜிஆர்.சின்னம், ஜெயலலிதா சின்னம் என்ற அதிமுக.வை நம்பி வாக்களித்து விடாதீர்கள். இப்போது அக்கட்சி துரோகிகள் கையில் உள்ளது.
தீயசக்திக்கு ஓட்டு்போடாதீர்கள். பணமூட்டையுடன் வரும் அதிமுகவிற்கும் வாக்களிக்காதீர்கள். கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துக்கள் திணிக்கப்படுகிறன.
பொதுமக்கள் உங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றால் ஏன் காவல்துறைக்கு பணம் கொடுத்து ஓட்டுப்போடச் சொல்ல வேண்டும். கருணாநிதி சொந்த ஊரில் இருந்து கொண்டு வந்த பணமா இது?
யோசித்து வாக்களியுங்கள். யார் நல்வர்கள் என்று உங்களுக்கு்த் தெரியும்.கொள்கைபற்றோடு நிற்பவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். பணத்திற்கு ஆசைப்பட்டால் ஏமாந்துவிடுவீர்கள் பின்பு தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. இவர்களிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க குக்கர் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கருத்து கேட்பு போன்றவற்றின் அடிப்படையில் உள்ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம். அனைத்து சமுதாயத்திற்கும் சம உரிமை, அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
ஆட்சி முடியும் நேரத்தில் உள் ஒதுக்கீடு என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். அக்கறை இருந்தால் ஆட்சியில் இருந்த போதே செய்திருக்கலாமே..
சீர்மரபினருக்கு டிஎன்டி.சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுப்போம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம்,
டீக்கடை, பஜ்ஜிக்கடை, புரோட்டாக்கடைகார்கள் நிம்மதியாக இருக்க குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள். தோட்ட தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். போடியில் பாதளாசாக்கடை பராமரிப்பு வரி அகற்றப்படும். குடிநீர் மீட்டர் அகற்றப்பட்டு இலவச குடிநீர் அளிக்கப்படும்.
தினசரி சந்தை, அரசு மருத்துவமனையில் உயர்சிகிச்சை, அரசுப்பணிகளுக்காக பயிற்சி மையம், கொட்டக்குடியில் அணை, குளிர்சாதன கிட்டங்கி போன்றவை ஏற்படுத்தப்படும்.
வாக்காளர்களுக்கு கொடுக்க எங்களிடம் பணம் கிடையாது. ஜெயலலிதா ஆண்டிபட்டி, போடியில் போட்டியிட்ட போது பணம் கொடுத்ததும் கிடையாது.
பணத்தை நம்பி ஓட்டுப் போட்டால் தமிழ்நாடே சுடுகாடாக மாறிவிடும். பணத்தை வாங்கி வாக்களிக்கும் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுங்கள். ஆட்சி, அதிகாரத்தை நல்லவர்கள் கையில் கொடுங்கள். இவ்வாறு டிடிவி.தினகரன் பேசினார்.
இதேபோல் கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர்கள் சுரேஷ், கதிர்காமு, ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்தும் அந்தந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.