மதுரை வடக்கு பாஜக வேட்பாளரை ஆதரித்து சிவாஜி கணேசன் மகனும், நடிகருமான ராம்குமார் பிரச்சாரம் செய்தார்.
மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் பா.சரவணனை ஆதரித்து யானைக்குழாய் பகுதியில் நடிகர் ராம்குமார் பேசியதாவது:
தேசியத்தையும், தெய்வீகத்தை முத்துராமலிங்க தேவர், நேதாஜி, அம்பேத்கர் ஆகியோர் வழியில் எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி கணேசன் ஆகியோர் வழிகாட்டினர்.
தேசியமும், தெய்வீகமும் சேர்ந்த ஒருவரை நல்ல மனிதனாக மாற்றும். இவ்விரண்டும் தான் பிரதமர் மோடியை தாங்கிக் கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடி எப்போதும் திறமைசாலி, அறிவாளி, புத்திசாலிகளை உடன் வைத்திருப்பார். அதில் ஒருவர் தான் டாக்டர் சரவணன். மோடி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
தற்போது நவீன ஆயுதங்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது. இந்த ஆயுதங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்ய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.
முத்துராமலிங்க தேவர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எப்படி மக்களுக்கு நல்லது செய்தார்களோ அதேபோல் சரவணனும் நல்லது செய்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகேயுள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு ராம்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வழக்கறிஞர்களிடம் பிரச்சாரம்
மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங், மதுரை வடக்கு பாஜக வேட்பாளர் சரவணன் ஆகியோர் நேற்று சென்றனர். அங்கிருந்த வழக்கறிஞர்களிடம் தாமரைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த வழக்கறிஞர்களிடமும் பிரச்சாரம் செய்தனர்.